தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை கொட்டும் என்றும் ‘மஞ்சள் அலர்ட்’அறிவித்தும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி நான்கு நாட்கள் கடந்த நிலையில் குறிப்பிடத்தகுந்த அளவில் புதிய காற்று சுழற்சி ஏதும் இதுவரை உருவாகவில்லை. இந்நிலையில் வழக்கமான வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் வளி மண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில் தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் கிழக்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, அமைந்தகரை, ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், வில்லிவாக்கம், அயனாவரம், மணலி, பிராட்வே, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், போரூர், குன்றத்தூர், பூந்தமல்லி, பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருவான்மியூர், அடையாறு என சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,’வடகிழக்கு பருவ மழை வலுவடைவதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் மழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்புள்ளது. அதே போன்று வரும் 7ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வரும் 6ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த 5 நாட்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்’ என்று தெரிவித்துள்ளது.