அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும் போது பாஸ்ட் டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ‘பாஸ்ட் டேக்’ எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்ட் டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும். இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘ 2017, டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவு 4 சக்கர வாகனங்களுக்கும் இனிமேல் 2021, ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்படுகிறது. மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி, 4 சக்கர வாகன உற்பத்தியாளர்கள், டீலர்களிடம் புதிதாக 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும்போதே ‘பாஸ்ட் டேக்’ எண்ணை அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.