வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 4 நாட்களுக்கு கன மழை பெய்யும், மேலும் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் சென்னையில் லேசானது முதல் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து காலை 8 மணி முதல் இரவு வரை தூறலுடன் கூடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளம் ஓடியது. பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. பல்வேறு பணிகளுக்கு செல்பவர்களும், அலுவலகம் செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை தொடரும், நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசும் பதிவாகும்.
அதேபோல் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு (20ம் தேதி வரை) கனமழை பெய்யும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.