தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளதால் ஒரு பவுன் ரூ.37,000 கீழ் சரிவை சந்தித்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒரு சவரன் ரூ.43,328க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றின் அதிகபட்ச விலையாகும். இதன்பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்துவருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்வதும் சற்று குறைவதுமாக இருந்து வந்தது.
தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் விலை உயர்ந்தது. அதன் பிறகு விலை குறைய தொடங்கியது. கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.38,568, 17ம் தேதி ரூ.38,432, 18ம் தேதி 38,240, 19ம் தேதி ரூ.37,920, 20ம் தேதி ரூ.37,920 ஆகவும் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்தது.
கடந்த 21ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,080க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் குறைந்தது. ஒரு கிராம் ரூ.4,748க்கும் சவரன் ரூ.37,984க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.104 குறைந்து ஒரு கிராம் ரூ.4,644க்கும், சவரனுக்கு ரூ.832 குறைந்து ஒரு சவரன் ரூ.37,152க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்துவருவதால் நகை வாங்குவோரை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. ஒரே நாளில் ஏற்பட்ட சரிவு இன்று காலையும் தொடர்ந்தது. மீண்டும் இன்று தங்கம் விலை சரிவை சந்தித்து, சவரனுக்கு ரூ.360 குறைந்தது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,800க்கு விற்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source Tamil Murasu