ஆடு முதல் கார் வரை ரூ. 2 கோடிக்கு சீர்வரிசை கொடுத்து மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளது பொதுமக்களை வாயை பிளக்க வைத்துள்ளது.
கடந்த 2 நாள்களாக இணையதளத்தில் திருமணத்துக்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை மற்றும் பொருள்கள் என்று வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் சுற்றி வந்தன. ஆடு முதல் கார் வரை... தங்கத்தட்டுகள் முதல் சில்வர் தட்டுகள் வரை சீர்வரிசையாக வழங்கப்பட்டதாக ஃபேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. யார் வீட்டு திருமணத்தில் மாப்பிள்ளைக்கு இப்படி சீர்வரிசை செய்யப்பட்டது என்று பலரும் தேடி வந்த நிலையில் மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ தமிழரசுவின் மகள் கீர்த்தியின் திருமணத்துக்குதான் இந்த சீர்வரிசை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசுவின் மகள் கீர்த்திக்கும் கொடிமங்கலம் வி.பி. வைத்தியநாதன் என்பவரின் மகன் வெற்றிவேல் என்பவருக்கும் திருமணம் கடந்த 4 ஆம் தேதி நாகமலைபுதுக்கோட்டையில் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்குத்தான் ஆடுகள், கார்கள், மோட்டார் சைக்கிள் , டிராக்டர், வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் அனைத்து வகையான பொருள்களும் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த சீர் வரிசை பொருள்களின் மதிப்பு மட்டும் ரூ.2 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மணமண்டபத்தில் குவித்து வைத்திருந்த சீர்வரிசை பொருள்களை கண்டு திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் வியந்தே போனார்கள்.
பொதுவாகவே மேலூர், உசிலம்பட்டி பகுதிகளில் மாப்பிள்ளைக்கு சீர்வரிசையை கொட்டி கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source Polimer News