Type Here to Get Search Results !

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது

மைசூருவில் ஆண்டுதோறும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

விஜயதசமியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா கர்நாடக மாநிலத்தின் பண்டிகையாக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மைசூரு தசரா விழா கர்நாடகத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது.

மகிஷாசூரன் எனும் அரக்கனை மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வெற்றி கொண்ட நாளைத்தான் மைசூரு தசரா விழாவாக மக்கள் கொண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது. முன்பு மகிஷாசூரனின் பெயரில் இருந்துதான் மகிசூர் என்று மைசூரு அழைக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அந்த பெயர் மருவி மைசூரு என்று மாறியுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது.

மைசூரு தசரா விழா விஜயநகரப் பேரரசர்களால் கடந்த 15-ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெர்ஷியன் தூதுவர் அப்துர் ரஜாக் என்பவர் மைசூரு தசரா விழா குறித்து “இரண்டு புனித நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சியும், இரண்டு கடல்களின் சங்கமமும்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மகாநவமி என்ற பெயரில் தசரா கொண்டாட்டங்கள் நடந்ததாக அவர் குறிப்பிட்டு இருப்பதாக வரலாறு கூறுகிறது.

விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருவை ஆட்சிபுரிந்த உடையார் வம்ச அரசர் ராஜ உடையார் தசரா விழாவை ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் கொண்டாட ஆரம்பித்தார். தற்போது ஸ்ரீரங்கப்பட்டணா மண்டியா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. தசரா கொண்டாட்டங்கள் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் இருந்துதான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அவரது ஆட்சி காலத்தில்தான் தசரா விழாவின்போது தனியார் தர்பார் நடத்தப்பட்டது. இந்த தர்பார் மைசூரு அரண்மனையில் அப்போது நடத்தப்பட்டது. அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த தர்பாரில் பங்குபெற்றனர். யது வம்ச மன்னர்களால் கொண்டாடப்பட்டு வந்த மைசூரு தசரா விழா தற்போது கர்நாடக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

மைசூரு தசரா விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் 10 நாட்களும் மைசூரு அரண்மனை வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். சுமார் ஒரு லட்சம் வண்ண மின்விளக்குகளால் அரண்மனை அலங்கரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மைசூரு மாநகரத்தில் உள்ள முக்கிய பகுதிகளும், சாமுண்டி மலையும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். மைசூரு மாநகரமே மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர இளைஞர் தசரா, கிராமிய தசரா, விவசாயிகள் தசரா, குழந்தைகள், பெண்கள் தசரா இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் மலர் கண்காட்சி, விளையாட்டு போட்டிகள், சாகச நிகழ்ச்சிகள், ஹெலிகாப்டர் ரைடு இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம்பெற்று இருக்கும். அவற்றை பார்க்க மக்கள் மைசூருவில் குவிவார்கள். மேலும் அரண்மனை உள்பட மைசூரு மாநகரின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

மைசூரு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியே ஜம்பு சவாரி ஊர்வலம்தான். இந்த நிகழ்ச்சி சாமுண்டீஸ்வரி அம்மன் போருக்கு தயாராகி படை வீரர்களுடன் போர்க்களத்திற்கு சென்று மகிஷாசூரனை வதம் செய்வதை நினைவூட்டும் விதமாக நடத்தப்படும். அதற்காக மைசூரு அரண்மனையில் இருந்து ஒரு யானை, பல யானைகள் புடைசூழ சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பன்னிமண்டபம் தீப்பந்து விளையாட்டு மைதானத்திற்கு செல்லும்.

முன்னதாக அரண்மனை வளாகத்தில் ரத்தம் சிந்தும் மல்யுத்த போட்டி நடத்தப்படும். அது முடிந்த பின்னரே ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கும். ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கண்ணைக்கவரும் நடனக் குழுவினரின் ஆடல் - பாடல், அலங்கார ஊர்திகள், குதிரைப்படை, ஒட்டகப்படைகளின் ஊர்வலம் இப்படி பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருக்கும். தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் சாகச குழுவினர் உள்பட பல்வேறு குழுவினரால் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்பின்னர் முடிவில் சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷாசூரனை அடக்கம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

பின்னர் விண்ணை முட்டும் அளவிற்கு வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இது ஒருபுறம் இருக்க மைசூரு அரண்மனையில் மன்னர் தனியார் தர்பார் நடத்துவதும், நவராத்திரியையொட்டி நடக்கும் சிறப்பு பூஜைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இப்படி கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மைசூரு தசரா விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிமையாக நடத்த அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து விவாதித்து பல கட்டுப்பாடுகளுடன் தசரா விழாவை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு தசரா விழா அக்டோபர் மாதம் 17-ந் தேதி(இன்று) தொடங்கி 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது.

அதேபோல் இன்று தசரா விழா மைசூருவில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. மைசூரு சாமுண்டி மலையில் அரசியல் அல்லாத பொதுவான நபர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்வதன் மூலம் மைசூரு தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் தொடங்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் மைசூரு சாமுண்டி மலையில் வைத்து தசரா விழா தொடங்கப்பட உள்ளது. இது 410-வது தசரா விழா ஆகும்.

இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 8.15 மணிக்குள் சுபமுகூர்த்தத்தில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருளும் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து மலர்களை தூவுவதன் மூலம் தசரா விழாவை ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி டீனும், டாக்டருமான மஞ்சுநாத் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு கொரோனா போரில் முன்களத்தில் நின்று போராடி வரும் ஒருவருக்குத்தான் தசரா விழாவை தொடங்கி வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்பேரில் கொரோனா போராளியான டாக்டர் மஞ்சுநாத்துக்கு இந்த ஆண்டு தசரா விழாவை தொடங்கி வைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்க விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் எஸ்.டி.சோமசேகர், பி.சி.பட்டீல், எம்.எல்.ஏ.க்கள் ஜி.டி.தேவேகவுடா, ராமதாஸ், நாகேந்திரா, ஹர்ஷவர்தன், நிரஞ்சன் குமார், மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தசரா விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாமுண்டி மலைக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொடக்க நிகழ்ச்சி முதல் தசரா நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளம் மற்றும் டி.வி.க்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதனை பொதுமக்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த ஆண்டு தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட உள்ளதால் ஏராளமான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஜம்பு சவாரி ஊர்வலம் 5 யானைகளை மட்டும் வைத்து மைசூரு அரண்மனை வளாகத்தில் மட்டுமே நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மைசூரு அரண்மனையில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சிகளை வழக்கம்போல் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த ஆண்டு மன்னர் யதுவீர் தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துவார். அதுவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும் அரண்மனையில் தினமும் 2 மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. விழாவையொட்டி மைசூரு மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad