அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரின் 48-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 79 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்குக் கைகொடுத்தார். களத்தில் சூர்யகுமார் யாதவ் அடித்த ஒரு பந்தைத் தடுத்த விராட் கோலி, அதனைக் கையில் எடுத்துக் கொண்டு சூர்யகுமார் யாதவை முறைத்த வண்ணம் அருகே வந்து நின்றார். விராட் கோலியின் இந்தச் செயலால் அதிருப்தியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள், தற்போது விராட் கோலிக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒருவரிடம் இப்படியா நடந்து கொள்வீர்கள், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ஒருவர் செய்யக் கூடிய செயலா இது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Source Nakkeeran