பால.ரமேஷ்.
*ஆத்திரம் எதைத் தரும்?*
ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.
கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான்.
அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார்.
"கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான்.
இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.
"தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்", என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.
உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.
சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. "அய்யோ கடவுளே காப்பாற்று!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.
**நம்மில் பலருக்கு ஆத்திரத்தில் அறிவும் – புத்தியும் வேலை செய்வதில்லை.* *ஆத்திரம் பெரும்பாலும்* *அழிவைத் தருகிறது.*
*ஆத்திரம் , கோபம்* *தவிர்த்து அன்புடனும்,* *அமைதியுடனும் வாழ்ந்திட வேண்டும்.**