மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாகவும், அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தமிழகப் பகுதிகளில் நிலவுவதாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சேலம், தருமபுரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர். ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source The Hindu Tamil