மனநலப் பிரச்சினைகள் குறித்த உலக மக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவை ஒருங்கிணைத்தல் ஆகிய நோக்கங்களுடன் அக்டோபர் 10-ம் நாளை உலக மனநல நாளாக ஐநா சபையின் துணை அமைப்பான உலக சுகாதார நிறுவனம் (WHO) 1992 முதல் அனுசரித்து வருகிறது.
தூங்கும் போது கதை சொல்ல ஒரு சொந்தம், எந்தப் பொருள் எடுத்தாலும் எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு சொந்தம், தவறு செய்து அடி வாங்கினால் அடிபடாமல் காக்கும் ஒரு சொந்தம், தோற்று துவண்டு இருக்கும் போது தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு சொந்தம் என இருந்த கூட்டுக் குடும்ப வகுப்பறைகள் சொல்லிக் கொடுத்த பாடங்கள் ஏராளம். அவை மனப்பாடம் செய்யும் ஏட்டுப் பாடங்கள் அல்ல.
மனதைப் பண்படுத்தும் மனப்பாடங்கள். திருவிழாக்கள் என்றாலே இரட்டிப்பாகும் இல்லற மகிழ்ச்சி. எல்லையில்லா பாடங்கள் சொல்லித் தந்த வீட்டுக் கூடங்களில் இன்று நிறைந்திருப்பவை சொந்தங்கள் அல்ல; சொகுசு வாழ்க்கைக்காக நாம் சொந்தமாக்கிக் கொண்ட தொலைக்காட்சியும், கைபேசியும் கம்யூட்டரும் தான். விளைவு உலகம் முழுவதும் 20 முதல் 30 சதவீத குழந்தைகளும் இளைஞர்களும் மனநோயின் அறிகுறியுடன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆம் உலகம் முழுவதும் 380 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒவ்வொரு வருடமும் மூன்றில் ஒரு பங்கு இளம்பருவத்தினரும் பத்தில் இரு குழந்தையும் மனது சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களால் உலக பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவு உற்பத்தியில் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
மனதின் சக்தி மனிதனை மாமனிதனாக்குவது மனதின் சக்தியே. மனநலம் இல்லையெனில் வெற்றி பெற்றவனுக்கும் மகிழ்ச்சி துாரமே. எவ்வளவு பயிற்சி இருந்தாலும் முயற்சி இருந்தாலும் மனபலம் இல்லாதவருக்கு வெற்றி எட்டாக்கனியே. உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி மட்டுமே பேசி வந்த நிலையில் உள்ளத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் 1992ல் உலக மனநல அமைப்பு அக்டோபர் 10ம் நாளை உலக மனநல நாள் என்று அறிவித்துள்ளது.
இந்நாளில் மனநலம் மற்றும் மனது சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கான தீர்வு பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒரு வாரம் முழுவதும் மனநல வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மாறி வரும் உலகில் 'இளைஞர்களுக்கான மனநலம்”பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.“ஊனுடம்பு ஆலயம் உள்ளம் ஒரு கோயில்” என்ற தத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொன்ன இந்தியாவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையான பதிவு.