Type Here to Get Search Results !

விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும்கூட மாமனார்-மாமியார் வீட்டில் வாழ பெண்ணுக்கு உரிமை உண்டு: நீதிமன்றம்

திருமணமான பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும்கூட கணவரின் பெற்றோரின் வீட்டில் வாழ உரிமை உண்டு என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.

ஒரு பெண் தனது கணவரிடமிருந்து பிரிந்திருந்தாலும் அவர்களின் குடும்ப வீட்டில் வாழ உரிமை உண்டு என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாமனார் அல்லது மாமியாருக்கு சொந்தமானதாக அந்த வீடு இருந்து அதில் கணவருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லையென்றாலும்கூட, மருமகளுக்கு அவ்வீட்டில் வசிக்க உரிமை உண்டு என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறைச் சட்டம், 2005 இன் கீழ், திருமணமான தம்பதியினரில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தாலும்கூட, மருமகளுக்கு அவரது மாமனார் - மாமியார் வீட்டில் வாழ உரிமை உண்டு.

அவர் மீது ஒரு சிவில் வழக்கு பதிவு செய்யப்படும்போது கூட இது பரிசீலிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றமும், அச்சமூகத்தின் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் திறனைப் பொறுத்தது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.

டெல்லியில் வசிக்கும் 76 வயதான அஹுஜா என்பவர் தனது வீடு, தனக்கு சொந்தமானது என்றும் தனது மகனுக்கோ அல்லது மருமகளுக்கோ அதில் எந்தவொரு உரிமையும் இல்லை என்றும் கூறி மருமகளை அந்த வீட்டிலிருந்து காலி செய்ய உயர் நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், மருமகள் அந்த வளாகத்தைக் காலி செய்ய வேண்டியதில்லை என புதிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad