Type Here to Get Search Results !

திசை மாறிய தொப்புள்கொடி உறவுகள்!,. --. பால.ரமேஷ்

பால.ரமேஷ்.



*தினம் ஒரு குட்டிக்கதை* .




கட்டாயம் படிக்க வேண்டிய கதை.



.......................................................................
நெய்யின் சுகந்த மணம், மெதுவாக சமையலறையிலிருந்து வெளிவந்து, வீடு முழுவதும் பரவியது.

அன்னபூரணி நெற்றியில் துளிர்த்த வியர்வையை, கைத்துண்டால் துடைத்தபடி, ஹாலில் வந்து அமர்ந்தாள்.

""என்ன பூரணி, பட்சணம் எல்லாம் தடபுடலா இருக்கு... வேலையை முடிச்சுட்டியா, இன்னும் ஏதாவது செய்யப் போறியா?''

""எல்லாம் முடிஞ்ச மாதிரிதான்ங்க. இன்னும் தேன்குழல் மட்டும்தான் செய்ய வேண்டியிருக்கு; அதை முடிச்சுட்டா, அவ்வளவு தான்.''

""எனக்கு ஒரு காபி தர முடியமா? மகனும், மருமகளும் வர்ற ஜோருல, என்னை மறந்துட்டியே...'' கிண்டலாக கூறினார் சுப்ரமணிய குருக்கள்.

""என்னை கலாட்டா செய்யலைன்னா, உங்களுக்கு பொழுதே போகாதே!'' சிறு முறுவலுடன் கூறியபடியே, காபி கலக்கச் சென்றாள் அன்னபூரணி.

சுப்ரமணிய குருக்களுக்கு 52 வயது. சென்னை வானகரத்தில் உள்ள அம்மன் கோவில் அர்ச்சகர். அன்னபூரணிக்கு வயது 47.

அவர்களின், ஒரே மகன் தான் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்சாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான்.

சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது தெரிந்து, தான் நன்றாக படித்தால் தான் குடும்பம் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து, எப்போதும் பாட புத்தகமும் கையுமாக அலைவான். வகுப்பில் எப்போதும், அவன் தான் முதல் மாணவன்.

பிளஸ் 2வில், பள்ளி அளவில் முதல் மதிப்பெண்ணும், மாவட்ட அளவில் மூன்றாவது, இடத்திலும் வந்தான்.

இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்து விட்டாலும், அந்த நான்கு ஆண்டுகள் படிப்பு முடிவதற்குள், சுப்ரமணிய குருக்கள் மிகவும் திண்டாடி தான் போய்விட்டார்.

பேங்க் லோன் கிடைத்திருந்தாலும், கல்லூரி கட்டணம் போக, மீதி செலவுகளான புத்தகம், உணவு, விடுதி கட்டணம் என மற்றவற்றுக்கெல்லாம், பல இடங்களில் கடன் வாங்கியும், இருந்த ஒரே ஓட்டு வீட்டையும் விற்றும் சமாளித்தார்.

எப்படியோ ஒரு வழியாக நல்ல மதிப்பெண்ணுடன் பரத்வாஜ் இன்ஜினியரிங் முடித்தான்.

அதற்குப் பின், சென்னையில் உள்ள, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், "அப்ரென்டிஸ்' ஆகசேர்ந்தான்.

இரண்டு வருட பயிற்சிக்குப்பின், பணி நிரந்தரம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் டெக்ஸாஸ் கிளைக்கு, பணி மாற்றம் செய்யப்பட்டான்.

கண்காணாத இடத்திற்கு போய், மகன் சாப்பாட்டிற்கு கஷ்டப்படக்கூடாது.

சிறு பிராயத்தில் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டது போதும். இனிமேல், அந்த நிலை வரக்கூடாது என்று. நினைத்த அன்னபூரணி, திருமணத்தை உடனே முடிக்க வேண்டும் என்று கூறிவிட்டாள்.

படிக்கும் காலத்தில், பரத்வாஜுக்கு பெரும்பாலும் ரசம் சாதம், தயிர்சாதம் தான். பல நேரங்களில் தொட்டுக் கொள்ள பொரியல் கூட இருக்காது. ஊறுகாயை தொட்டுக் கொண்டு சாப்பிடுவான். குருக்களும், அவர் மனைவியும், தாங்கள் சாப்பிடாமல் கூட இருந்து விடுவர்.

ஆனால், மகனுக்கு எப்படியாவது, எதையாவது மூன்று வேளையும் சாப்பிடக் கொடுத்து விடுவர்.

பரத்வாஜும், இதுதான் வேண்டும், அதுதான் வேண்டும் என்று, அடம்பிடிக்காமல் கிடைத்ததை சாப்பிட்டு, படிப்பு ஒன்றையே, ஒரு தவம் மாதிரி மேற்கொண்டிருந்தான்.

பணி நிரந்தரம் செய்யப்பட்ட உடனே திருமணம் நடந்ததால், அதுவரை அவனுக்கு வந்திருந்த உதவிப் பணத்தில், வங்கியில் படிப்பு லோனுக்காக பெற்றிருந்த கடனை அடைத்துவிட்டு, மீதி சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து தான், திருமண செலவுகளை மேற்கொண்டனர்.

மருமகள் சிந்துஜாவும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். அவள் அப்பா, ஒரு ஓட்டலில் சமையற்காரர். பிளஸ் 2 முடித்திருந்தாள்.

மேற்கொண்டு படிக்க வசதியில்லாததால், ஒரு சிறு நிறுவனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.

அவளுக்கு பின், மூன்று தங்கைகள் படித்து கொண்டிருந்தனர்.

சுப்ரமணிய குருக்களுக்கும், அன்னபூரணிக்கும் ஒரே எண்ணம் தான். ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று.

வரதட்சணை, நகை, சீர் எதுவும் கேட்காமல், இவர்களே திருமண செலவுகளை செய்து, திருமணத்தை முடித்தனர்.

திருமணமான ஒரே வாரத்தில், பரத்வாஜ், சிந்துவுடன் டெக்ஸாஸ் சென்று விட்டான்.

போன புதிதில், அவ்வப்போது போன் செய்து பேசிக் கொண்டிருந்த மகனும், மருமகளும், அதன் பின், மாதம் ஒரு முறை... இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று பேசலாயினர்.

டெக்ஸாஸ் சென்ற பின், பரத்வாஜ் ஒரு முறை கூட பணம் அனுப்பவில்லை.

முதல் மாதம் சம்பளம் வாங்கியவுடன், "அப்பா, இங்கே இருக்குற லைப் ஸ்டைலுக்கேற்ற படி வீட்டுக்கு, பர்னிச்சர் வாங்கணும்.

இங்கு கார் இல்லாமல் இருக்கவே முடியாது. அதனாலே, ஒரு ரெண்டு மாதம் கழித்து பணம் அனுப்பறேன்...' என்று கூறினான்.

அதற்கு சுப்ரமணிய குருக்கள், "நீ அங்கே வேண்டியதை செய்துக்கப்பா. இங்கே எங்களுக்கு என்ன பணமுடை... நாங்க ரெண்டு பேர் தானே... நாங்க சமாளிச்சுக்குவோம்...' என்று கூறிவிட்டார்.

அதற்குப் பின், பரத்வாஜிடமிருந்து பணம் பற்றி எந்தப் பேச்சும் வந்தது கிடையாது.

சுப்ரமணிய குருக்களுக்கும், அன்னபூரணிக்கும், மகன் பணம் அனுப்பவில்லையே என்ற கவலையெல்லாம் இல்லை. அவன் நன்றாக இருந்தால், அதுவே போதும். பட்டினி அவர்களுக்கு பழக்கம் தானே!

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மகன் இதோ இப்போது தான் சென்னை வருவதாக போன் செய்திருந்தான்.

அதற்கு தான் அன்னபூரணி தடபுடலாக பட்சணங்கள் எல்லாம் செய்து அமர்க்களப்படுத்தி கொண்டிருக்கிறாள்.

அன்னபூரணியிடம் மகன் போனில் பேசும் போதெல்லாம், "அம்மா இங்க சொர்க்கம் மாதிரி இருக்கும்மா.

பெரிய வீடு, தோட்டம் எல்லாம் இருக்கு. வீடு பெருக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எல்லாவற்றிருக்கும் மிஷின் இருக்கு.

நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வந்து, எங்க கூடவே தங்கிடுங்கம்மா... அங்கே என்ன இருக்கு?' என்று அடிக்கடி கூப்பிடுவான்.

"அப்பா கோவிலை விட்டுட்டு வருவார்ன்னு தோணலைப்பா, நீ சென்னை வரும்போது, அது பற்றி பார்க்கலாம்...' என்று கூறி வந்தாள் அன்னபூரணி.

மகன் சொல்லிச் சொல்லியே அன்னபூரணிக்கு, அந்த ஆசை அடி மனதில் தங்கி விட்டது.

எப்போதும் சுப்ரமணிய குருக்களிடம் வாய் ஓயாமல் கூறத் தொடங்கி விட்டாள், ஒரு மாதமாவது அங்கே போய் அக்கடாவென்று இருந்து விட்டு வர வேண்டுமென்று.

இப்போது மகன் வரும் தகவல் கிடைத்ததிலிருந்து அவளுக்கு கை, கால் ஓடவில்லை. எப்போது மகன் வந்து, தங்களை அவர்களுடன் கூட்டிப் போவான் என்றே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

பரத்வாஜ் வரும் அன்று, மீனம்பாக்கம் விமானநிலையம் சென்று, அவர்களை கூட்டி வர வேண்டும் என்று தான் அன்னபூரணிக்கு ஆசை.

ஆனால் பரத்வாஜ், " அம்மா நீங்க சிரமப்பட வேண்டாம். கிளியரன்ஸ் முடிய நேரமாகும். அதனாலே, நாங்களே வந்துடறோம்...' என்று கூறி விட்டதால், வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து கொண்டிருந்தாள்.

காலையிலிருந்து சாப்பிடாமல் இருவரும் காத்திருக்க, ஒருவாறு மாலை மூன்று மணிக்கு வந்து சேர்ந்தனர் பரத்வாஜும், சிந்துவும்.
ரெடியாக வைத்திருந்த ஆரத்தியை சுற்றி, வீட்டுக்குள் அழைத்தாள் அன்னபூரணி.

இருவரும் ஏற்கனவே சிவந்த நிறமானாலும், இப்போது இன்னும் நன்கு சிவந்து, அழகாக இருந்தனர். பெருமை பிடிபடவில்லை அன்னபூரணிக்கு.

சுப்ரமணிய குருக்கள், ""காலையில் இருந்து அம்மா சாப்பிடாம உங்களுக்காக தான் காத்திருக்காள்.

வாப்பா, ஒரு வாய் சாப்பிடலாம்.''
""இல்லைப்பா, நாங்க சிந்து வீட்டுலியே சாப்பிட்டுட்டோம். அம்மா, உன் கையாலே, ஒரு வாய் காபி குடும்மா. அது போதும்.''

அப்போது தான், அவர்களுக்கு உறைத்தது, அவர்கள் இருவர் கையிலும் லக்கேஜ் எதுவும் இல்லாதது.

சிந்து தன் கையில் வைத்திருந்த துணி பையை மாமியாரிடம் கொடுத்தாள். அதில் சில சாக்லேட் வகைகளும், ஒரு புடவை ஜாக்கெட், வேட்டி துண்டும் இருந்தது.

அன்னபூரணிக்கு பசியில் மயக்கமே வரும் போலிருந்தது.

பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த அத்தனை உணவு வகைகளும் சீண்டுவாரற்று, அங்கே கிடந்தது.

காபி சாப்பிட்ட சிறிது நேரத்தில், ""சரிப்பா நாங்க கிளம்பறோம். அங்கே சிந்து வீட்டுல தங்கிக்கிறோம். நான் அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். ஒரு மாசம் லீவு இருக்கு இல்ல,'' கூறியவாறே கிளம்பி விட்டான் பரத்வாஜ்.

மறக்காமல், மாமியார் செய்து வைத்திருந்த பட்சணங்களை ஒன்று விடாமல் உரிமையுடன், "பேக்' செய்து கொண்டு கூடவே கிளம்பி விட்டாள் சிந்து.

இவர்கள் இருவரும், அதை ருசி கூட பார்த்திருக்கவில்லை.

இருவருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தாலும், சுப்ரமணிய குருக்கள் வெளியில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.

அன்னபூரணி, அவர்கள் கிளம்பியவுடன் மனம் தாளாமல் புலம்பி தள்ளி விட்டாள்.

""ஒரே பையன்னு ஆசையா வளர்த்தோம். இப்ப அவன் யாரோ மாதிரி வந்து அரைமணி நேரத்துல ஓடறான். எனக்கு மனசு சங்கடமா இருக்குங்க.''

குருக்கள் தான் அவளை பலவாறு தேற்றி, சாப்பிடவைத்தார்.

இரண்டு நாட்கள் கழித்து, மறுபடியும் வந்த பரத்வாஜ், அப்பாவிடம் தனியாக பேசினான்.

""அப்பா, சிந்துக்கு அவ அம்மாவை டெக்ஸாசுக்கு கூட்டிக்கிட்டு போய், ஒரு மாசம், கூட தங்க வைச்சுக்க ஆசைப்பா.

அவ அம்மாவும் பாவம், சின்ன வயசிலிருந்து குடும்பம், குழந்தைகள்ன்னு உழைச்சு ஓடாயிட்டா.

அதனால, அவங்களை நாங்க இப்ப கூட்டிக்கிட்டு போகப் போறோம்.

நீங்க எல்லாத்தையும் சரியா புரிஞ்சிப்பீங்க. அதனால தான், உங்ககிட்ட சொல்றேன்.

அம்மாவுக்கு எப்படியாவது சொல்லி புரிய வைக்கறது உங்க பொறுப்புப்பா.

""அப்புறம்... சிந்துவிற்கு தனி குடித்தனமா இருக்கிறது தான் பிடிச்சிருக்குப்பா.

நீங்களும், அம்மாவும் அங்கே சாஸ்வதமா இருக்க முடியாதுப்பா. அவ பிரைவசியை விரும்புறா.

அம்மாவுக்கும், அவளுக்கும் ஒத்துப் போகாதுப்பா.

நீங்க அங்கே வந்தா, அவ உங்களை உதாசீனப்படுத்திடுவாளோன்னு எனக்கு பயமா இருக்குப்பா.

அதனால, நீங்க போன் கூட செய்யாதீங்க. நானே, அப்பப்ப சமயம் கிடைக்கும் போது, உங்களுக்கு போன் செய்றேன்.''

அத்தோடு டெக்ஸாசுக்கு கிளம்பும் அன்று தான் இருவரும் வந்து ஐந்து நிமிடம் இருந்து, விடை பெற்றுக் கிளம்பினர்.

அன்று இரவு, ""என்னங்க நான் உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து, எதுக்கும் ஆசைப்பட்டதில்லை.

ஆனால், நம்ம பையன் வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம், ஒரு மாசமாவது அங்கே போய் இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்.

அது நிராசையாயிடுச்சு சரி, வாங்க தூங்கலாம். நீங்க நாலு மணிக்கு எழுந்து குளிச்சு கோவிலுக்கு போகணும்.''

இரண்டு மாதங்கள் உருண்டோடிய பின், டெக்ஸாசில் ஒரு நாள்...
""என்னங்க... டாக்டர் நான் மாசமா இருக்கறதை உறுதி செய்திட்டாரு; எனக்கு விதம் விதமா சாப்பிடணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்குங்க.

எங்க அம்மா, "நான் இப்பத்தான், ஒரு மாசம் உங்க கூட இருந்தேன் மறுபடியும் அப்பாவையும், தங்கைகளையும் விட்டுட்டு வர முடியாதுன்னுட்டாங்க.

எனக்கு சாதாரணமான தினப்படி சமையல் தான் தெரியும். இப்ப என்னங்க செய்யறது?''

""நாம வேண்டுமானால், ஒரு சமையல்காரியை வேலைக்கு அமர்த்திக்கலாம்?''

""இங்கே அப்படியெல்லாம் சமையலுக்கு ஆள் கிடைக்க மாட்டாங்களே.''

""அப்ப என்ன தான் செய்யறது?''

""பேசாம உங்க அம்மாவை வரவழைச்சா என்னங்க? பிரசவம் முடியற வரை, இங்கேயே இருந்து, எனக்கு வேண்டியதை சமைச்சு போடட்டுமே.''

""அப்பா ஒரு மாசம் வரை வேண்டுமானால், கோவிலை பார்த்துக்க வேறு ஆளை ஏற்பாடு செய்துட்டு வருவார். ஆனால்...'' அதுக்கு மேல முடிக்க விடவில்லை சிந்துஜா.

""அவர் எதுக்கு இங்கே வரணும்? உங்க அம்மா மட்டும் வந்தா போதும்.''

""நீ தானே நமக்கு பிரைவசி தேவை, அவங்க... இங்கே வந்தா சரிப்படாதுன்னு சொன்னே. இப்பக் கூப்பிட்டா எப்படி வருவாங்க?''

""அதெல்லாம், இங்க வறதுக்கு உங்க அம்மாவுக்கு ரொம்ப ஆசை.

சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கிறவங்க தானே?

இங்க வந்தா, மூன்று வேளையும் நல்லா சாப்பிடலாமே. நீங்க போன் செய்யுங்க சொல்றேன்.''

சிந்துஜா பேசுவது ஒன்றுமே பிடிக்கவில்லை பரத்வாஜ்க்கு, ""சரி, நல்ல சேதியை டாக்டர் சொல்லியிருக்காரு.

புதுசா கட்டப்பட்ட அம்மன் கோவிலுக்கு போன வாரம் கும்பாபிஷேகம் நடந்தது இல்ல... அங்க போய் சாமி கும்பிட்டுட்டு வரலாம். வந்து மீதியை பார்த்துக்கலாம்.''

இவர்கள் போன போது சற்றுக் கூட்டமாக இருந்தது. அப்போது தான் அம்மனுக்கு அலங்காரம் முடித்து, திரை விலகி தீபாராதனை காட்டப்பட்டது.

கண்களை மூடி கை குவித்து இறைவனை வணங்கி, கண்களை திறந்தால், தீபாராதனை தட்டுடன் அருகில் வந்த குருக்களைப் பார்த்து, அதிர்ந்தான் பரத்வாஜ்.

அங்கே நிற்பது யார்? அப்பாவா? கண்களை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான்.
"அப்பா...' அவனை அறியாமல் வாய் முணுமுணுத்தது.

""கொஞ்சம் இருப்பா. இதோ வரேன்.'' அங்கிருந்த வேறொரு குருக்களிடம் ஏதோ சொல்லி விட்டு வந்த அப்பா, ""அதோ, அது தான் நம்ம குவார்ட்டர்ஸ் வாங்க, போகலாம்,'' குருக்கள் முன்னே நடக்க, பேச்சற்று பின் தொடர்ந்தனர் இருவரும்.

வீட்டில் இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அன்னபூரணி, ""சென்னையில் அப்பா வேலை பார்த்த கோவில் தர்மகர்த்தாவின் பொண்ணும், மாப்பிள்ளையும் இங்கே தான் இருக்காங்க.

அவர்கள் கட்டிய கோவிலுக்கு, பூஜை விதிமுறைகள் தெரிஞ்ச தலைமை குருக்கள் வேணும்ன்னு, அப்பா கிட்ட கேட்டுகிட்டாங்க.
L
தர்மகர்த்தாவும், "நீங்க டெக்ஸாசுக்கு கிளம்புங்க.

நான், இங்கே வேறு ஆளை பார்த்துக்கறேன்'னு சொல்லிட்டார்.

""அப்பாவும் சென்னையில நமக்கு யாரிருக்கா... தெய்வ கைங்கரியத்தை எங்கேயிருந்து செய்தா என்னன்னு புறப்பட சொல்லிட்டார்.

இங்கே அப்பாவுக்கு மாத சம்பளம், ஒரு லட்சம் ரூபாய்,'' கட கடவென கூறி முடித்தாள் அன்னபூரணி.

""அம்மா, இப்ப உங்க மருமகள் தாய்மை அடைஞ்சிருக்கா.

அவளுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு தோணுதாம்; அவ அம்மா, இப்ப வர முடியாத சூழ்நிலை. நீங்க ரெண்டு பேரும் எங்க கூட பிரசவம் வரை இருந்தா நல்லாயிருக்கும்மா.''

""அது சாத்தியப்படாதுப்பா, அப்பா பூஜை முடிச்ச மீதி நேரத்துல, இங்கே இருக்கிற வேத பாடசாலையில் வேதம் சொல்லிக் கொடுக்கிறார். அதுக்கு இங்கே இருக்கிறது தான் சவுகரியம்.''

""அம்மா... அப்பா வரமுடியலைன்னா பரவாயில்லை. நீ மட்டுமாவது வாம்மா.''
""இல்லைப்பா அப்பாவுக்கும் வயசாகிறது.

அவரை பார்த்துக்கறது தான், என் முதல் கடமை.

அது மட்டுமில்லாம, தினமும் கோவில் பிரசாதங்களை செய்கிற வேலையும் எனக்கு கொடுத்திருக்காங்க.

வேதம் கத்துக்கறவங்களுக்கும், கடவுளை தரிசிக்க வர்றவங்களுக்கும், மதிய உணவு செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கு.

இதுக்காக எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மாத சம்பளம் தர்றாங்க. வேண்டுமானால் நீங்க ரெண்டு பேரும் இங்கே தங்கிக்குங்க.

நான் வேண்டியதை சமைச்சுப் போடுறேன்.''

""இல்லைம்மா. இங்கே குவார்ட்டர்ஸ் சின்னதா இருக்கு,'' என்று இழுத்தான் பரத்வாஜ்.

""ஒ... ஆமாம் உங்களுக்கு இங்கே பிரைவசி இருக்காது இல்ல... அதை நான் மறந்துட்டேன்.

சரிப்பா நான் தினமும், அவ விருப்பப்படறத சமைச்சு தர்றேன். நீ வந்து வாங்கிகிட்டு போ.''

""இல்லைம்மா. என் ஆபீஸ் ஒரு கோடியிலன்னா, வீடு இன்னொரு கோடியில, நீங்க இருக்கறது மற்றொரு பக்கம். தினமும் வர முடியாதும்மா. அது கஷ்டம்.''

""பரத்வாஜ், இவ்வளவு நாள் உனக்காகவே நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்தோம், பசியும் பட்டினியுமா இருந்து, உன்னை ஆளாக்கி, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம்.

ஆனால், கல்யாணம் ஆனவுடன் உனக்கு நாங்க தேவையற்று போயிட்டோம்.

""கலங்கி நின்ன எங்களுக்கு தொப்புள் கொடி உறவு போனா என்ன, வேற புதிய உறவுகளை ஏற்படுத்தி தர்ரேன்னு, கடவுள் புதிய பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

இனிமேல், அந்த பந்தங்களை எங்களால விட முடியாது.

""ஆனா... உனக்கு எப்ப இங்கே வரணும்ன்னு தோணினாலும், நீங்க ரெண்டு பேரும் வரலாம்.

எங்களால முடிஞ்சத செய்றோம். இப்ப மதிய உணவு நேரம் நெருங்கிடுச்சு. நான் போய் பரிமாறணும்.

""உங்களுக்கு எது வசதியோ, அது மாதிரி முடிவெடுங்க. சாப்பாடு எல்லாம் இருக்கு; எடுத்துப் போட்டு சாப்பிடுங்க; நான் அரை மணி நேரம் கழித்து திரும்பி வருவேன்,'' என்று கூறி அரக்க பறக்க கிளம்பினாள் அன்னபூரணி.

பெற்றவர்களின் அன்பை உணர முடியாமல், மனைவியின் சுயநல போக்கிற்கு அடிமையாகி, அவர்களை உதாசீனப்படுத்தி இப்போது, அதே அன்பிற்கு ஏங்கிய பரத்வாஜ், சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பாவின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க கூசி, அங்கிருந்து தன் மனைவியுடன், தளர்ந்த நடையுடன் வெளியேறினான்.


Top Post Ad

Below Post Ad