வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை முன்னறிவிப்பு வருமாறு:-
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.