இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன் படி தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அக்.9-ம் தேதி அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் 35-45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.