Type Here to Get Search Results !

தன்னுடைய கணித ஆசிரியருக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள பங்குகளை பரிசளித்த ஐடிஎப்சி வங்கி தலைவர்



ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான வி.வைத்தியநாதன் ஒரு லட்சம் பங்குகளை தனது பள்ளி கணித ஆசிரியருக்கு பரிசாக அளித்துள்ளார். இவற்றின் மதிப்பு ரூ.30 லட்சமாகும்.
பள்ளி நாட்களில் கணித ஆசிரியரான குர்தயாள் சரூப் சைனி அளித்த உதவிக்கு பிரதி உபகாரமாக இந்த பங்குகளை பரிசளிப்பதாக பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். நிறுவன சட்டத்தின்படி, இந்தப் பங்குகளைப் பரிசாக பெறுபவர் அதற்குரிய வருமான வரியை சட்டத்தின்படி செலுத்துவார் என்று வைத்தியநாதன் செபி-க்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு ரயிலில் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது என்று தனது நண்பரிடம் குறிப்பிடுகிறார் வைத்தியநாதன். உயர் படிப்புக்கு ஜார்க்கண்ட் மாநிலம் மெஸ்ராவில் அமைந்துள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அனுமதி கிடைத்த போது தனக்கு ரயில் டிக்கெட் வாங்க கணித ஆசிரியரான குர்தயாள் சரூப் சைனி ரூ.500 அளித்து உதவியுள்ளார்.
இங்கு படித்ததுதான் தனது வாழ்க்கையை மாற்றியதாகக் குறிப்பிடும் வைத்தியநாதன், பல ஆண்டுகளாக தனது ஆசிரியரை தேடி அலைந்துள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் இவரது முந்தைய நிறுவன பணியாளர் ஆக்ராவில் ஆசிரியரைக் கண்டுபிடித்து இவரிடம் தெரிவித்துள்ளார். அவரை சந்தித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார் வைத்தியநாதன். கடந்த திங்கட்கிழமை பங்குகளை ஆசிரியருக்கு பரிசாக பரிமாற்றம் செய்துள்ளார்.
கேபிடல் பர்ஸ்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கியவர் வைத்தியநாதன். தனது வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கு வைத்தியநாதன் நிறுவன பங்குகளை பரிசளிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத் தலைவராக இருந்த போது 4.30 லட்சம் பங்குகளை (மதிப்பு ரூ.20 கோடி) தனது 2 டிரைவர்கள், 3 பணியாளர்கள் மற்றும் சில நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு பரிசாக அளித்துள்ளார்.
Source The Hindu Tamil

Top Post Ad

Below Post Ad