மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த அத்தியாவசியப் பணியாளர்கள் அதிகமாக பயணிப்பதால் அலுவலக நேரங்களில் தினமும் 100-க்கும்மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில்வே ஊழியர்கள், வங்கிகள், காப்பீடு, பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்துசென்னை கடற்கரை, சென்ட்ரலுக்கு தினமும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயில்களில் பயண அனுமதிக்கான அடையாள அட்டை இருந்தால்தான் செல்லமுடியும். ஆரம்பத்தில் தினமும்50 ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, அத்தியாவசியப் பணியாளகள் அதிகமாக பயணிப்பதால் தினமும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொதுப் பயணிகளுக்கான மின்சார ரயில் சேவை தொடங்குவது குறித்து ரயில்வே வாரியம் இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. வாரியம் அறிவித்ததும் மின்சார ரயில்களின் சேவை தொடங்கப்படும்’’ என்றனர்.