இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்(FSSAI), அக்டோபர் 1 முதல் எந்த விதமான சமையல் எண்ணெயுடனும் கடுகு எண்ணெயைச் சேர்க்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. சுத்தமான கடுகு எண்ணெயை மக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ இம்முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமையல் எண்ணெயுடன் கடுகு எண்ணையைச் சேர்த்து உற்பத்தி செய்ய அக்டோபர் 1, 2020 முதல் தடை விதிக்கப்படுகின்றது. மக்களுக்குத் தூய கடுகு எண்ணெய் தயாரித்து வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.
பொதுவாக, இரண்டு வகையான தாவர சமையல் எண்ணெய்களைக் கலந்து தயாரிக்கும்போது, ஒரு எண்ணெயின் அளவு 20 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால், கடுகு எண்ணெயுடன் எந்த எண்ணெயையும் கலக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கலப்பட எண்ணெய்களின் உற்பத்தியைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சி இது. நாடு முழுவதும் சுத்தமான கடுகு மற்றும் சமையல் எண்ணெய் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாநில உணவுப் பாதுகாப்புத் துறைக்கு, 'எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் கடுகு எண்ணெயில் ஒரைசனால் கலப்படம் செய்யப்படுகின்றதா என்பதை ஆராய வேண்டும்' என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது .
அரிசி தவிட்டு எண்ணெயில் ஓரைசனால் அதிகம் இருப்பதால், அது கடுகு எண்ணெயில் கலப்படமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது