ஒரு ஊரில் ஒருவன் இருக்கிறான்.
அவனுக்கு ஓடு மேயும் வேலை.
தினக்கூலி. ஏழை.
ஒருநாள் 'கடவுளே, என்ன பொழப்பு இது' என்று வாழ்க்கையை நொந்து கொண்டு பக்கத்து ஊருக்கு வேலை பார்க்கப் போகிறான்.
காட்டு வழியே நடந்து கொண்டிருக்கும் போது அய்யனார் சிலை பேசுகிறது!
"இந்தப்பா, நில்லு!"
இவன் பயந்து போய் வேகமாக ஓடுகிறான்.
"பயப்படாதே, உன் பிரார்த்தனை பலித்தது. அங்கே உன் காலருகே தோண்டு " என்கிறது. தோண்டுகிறான்.
ஒரு பானை நிறைய தங்கக் காசுகள்.
அவனுக்கு இன்ப அதிர்ச்சி.
"நன்றி, நன்றி கடவுளே" என்று மெய் சிலிர்க்கிறான்.
சிலை "பூரா காசையும் துடைத்து எடுத்துக் கொள்ளாதே, ஏதோ காணிக்கையாக உள்ளே கொஞ்சம் போட்டுவிட்டு மீண்டும் மூடி விட்டுப் போ" என்கிறது.
இவன் நாலே நாலு காசுகளை எண்ணி வேண்டாவெறுப்பாக உள்ளே போட்டுவிட்டு நடக்கிறான்.
முக்கால் வழி வந்து விட்டோம்.
சரி.ஒப்புக் கொண்ட வேலையை முடித்து விட்டு ஒரேயடியாக இந்த வேலைக்கு முழுக்குப் போட்டு விடுவோம் என்று எண்ணியபடியே வேலைக்குச் செல்கிறான்.
ஓட்டு மேல் ஏறி பானையை ஒரு துணியால் மூடி அருகில் வைத்துக் கொண்டு வேலை செய்கிறான்.
வீட்டுக்காரம்மா "அதில் என்ன?" என்று கேட்க "ஒண்ணுமில்லை, வீட்டுக்கு பருப்பு வாங்கிப் போறேன்" என்கிறான்.
மத்தியான சமையல் நேரம்.
இவன் ஓட்டு மேலேயே கொஞ்சம் கண்ணசந்து விட, அம்மாள் வீட்டில் பருப்பு இல்லை என்று அறிகிறாள்.
"சரி, அவன் கிட்டதான் பருப்பு இருக்கே; கொஞ்சம் எடுத்துப்போம்" என்று பானையைத் திறக்கிறாள்.
இன்ப அதிர்ச்சி.
தங்கம் எடுக்கப்பட்டு பானை நிரம்ப பருப்பு நிரப்பப்படுகிறது.
மாலையில் இவன் அதைத் திறந்து பார்க்க அதிர்ச்சி.
இதில் இருந்த தங்கம் எங்கே? என்று கேட்க
அந்த அம்மாள் அவள் உறவினர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு இவனை பைத்தியம் என்று சொல்லி அடித்து விரட்டி விடுகிறாள்.
இவன் விதியை நொந்து கொண்டு மீண்டும் அதே வழியில் வருகிறான்.
அய்யனார் சிலை இவனைப் பார்த்து
"பாருப்பா, இது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டிய தங்கம் , உன் மூலமாகப் போய்ச் சேர்ந்தது,
உனக்குச் சேர வேண்டியது அந்தப் பானையில் இருக்கிறது எடுத்துக் கொள்" என்கிறது.
இவன் "ச்சே, அப்பவே கொஞ்சம் அதிகமாகப் போட்டிருக்காலாமே "என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான்.
இதில் இருந்து தெரிய வரும் இரண்டு உண்மைகள்.
நமக்குக் கிடைக்க வேண்டியது தான் கிடைக்கும்.
என்றாலும், நமக்குக் கிடைக்க வேண்டியதை சில சமயம் நாம் தான் தீர்மானிக்கிறோம்
இந்தக் கதையைக் கேட்டுவிட்டு நம்ம ஆள் ஒருத்தன் சொன்னான்.
"நான் கூட ஒரு நாள் ஒரு பாதை வழியாகப் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு சூட்கேஸ் கிடைச்சது.
திறந்து பார்த்தேன்.
நிறையப் பணம் இருந்தது. ஆனாலும் எனக்குக் கிடைக்க வேண்டியது கிடைச்சது" என்றான்.
"எவ்வளவு?" என்று கேட்டேன்.
அவன் சொன்னான்.
"ஆறு மாசம் கடுங்காவல் தண்டனை"