ஆன்லைன் வகுப்பு களுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்கள் முயற்சிக்கும்போது குறுக்கிடும் ஆபாச இணையதளங்களால் மாணவர்களின் கவனம் திசைமாறிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆபாச இணையதளங்களை மாணவர்கள் அணுக இயலாத வகையில் வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.
இதேபோல, விமல்மோகன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண் பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கவும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பிரபாகரன் மற்றும் வக்கீல் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கில் இதுவரை எழும்பூர் கண் மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
மத்திய அரசும் எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுக்கவில்லை. எனவே ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெரும்பாலான நேரங்களில் உரிய நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பாடங்கள் கற்பிப்பது தவிர்க்க முடியாது என்கிற போதும் மற்ற மாணவர்களுக்கு இது தேவையற்ற சுமையாக அமைந்துள்ளது. மலை பகுதிகளிலும் குக்கிராமங்களிலும் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளது என்றார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். ஆன் லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை எப்படி பின்பற்றப்படுகிறது?
மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள்? தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துகிறார்களா? என்பது தொடர்பாக கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை இல்லை.
*ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
*அரசுகள் வகுத்துள்ள ஆன்லைன் வகுப்புகள் மற்றும் அவற்றிற்கு இடையிலான இடைவெளி நேரத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
*விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் கண்காணிக்கக் குழுக்களை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
*ஆன்லைன் வகுப்பின்போது ஆபாச இணையதளங்களைப் பார்க்க நேரிட்டால் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்.
* வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*பெற்றோர் ஆசிரியர் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
*ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும்.
வழிகாட்டுதல்களை மீறினால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 வழிகாட்டுதல்களை வழங்கி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Source Tamil Murasu