கொரோனாவுடன் சண்டையிடுவதற்கு உடலை தயார்ப்படுத்த, மக்கள் பல தீவிரமான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். அதில் ஒன்று, நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது. அதில் கவனிக்க வேண்டிய மற்றும் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த அக்குபஞ்சர் மற்றும் வர்ம மருத்துவர் ராஜரீகா.
1. அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை, திராட்சை மற்றும் நாட்டு மாதுளை விதைகள். நம் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவு (ORAC -Oxygen Radical Absorbance Capacity) 5,000 வரை இருக்க வேண்டும். பிறந்தது முதல் 15 வயதுவரை, உடலில் தேவையான ORAC இருக்கும். அதற்குப் பின்னர், உடலுக்கு நாம்தான் இதை வெளியிலிருந்து கொடுக்க வேண்டும். திராட்சை மற்றும் மாதுளை விதைகளின் மூலம், இந்த ORAC அளவை நிரம்பப் பெறலாம். நாள் ஒன்றுக்கு 4 விதைகள் என எடுத்துக்கொள்ளலாம்.
2. பாதாம், முந்திரி, பிஸ்தா இவற்றை, நாள் ஒன்றுக்கு ஒவ்வொன்றிலும் மூன்று சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதுவும் நம் உடலில் ORAC அளவை அதிகரிக்கும்.
3. நாட்டு மாதுளை ஜூஸ் பருகுவது, நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக மேம்படுத்தும். ஆரஞ்சு, திராட்சை ஜூஸும் பருகலாம். சிலருக்கு இவை சளியை ஏற்படுத்தும் என்றால், அவர்கள் தவிர்க்கலாம்.
4. சீதா பழம் மிக சத்துள்ள பழம் என்பது பலரும் அறியாதது. இதை எடுத்துக்கொள்வது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
5. நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை பேஸ்ட்டாக அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் சாதாரண தண்ணீரில் (வெந்நீர் அல்ல) சேர்த்து, அதில் சில சொட்டுகள் லெமன், கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் மிக நல்லது. இதை காலை அல்லது மாலை 4 மணிக்குள் எடுத்துக்கொள்வது நல்லது. மாலை 6 மணிக்கு மேல் எடுத்துக்கொண்டால் சளி பிடிக்கும் வாய்ப்புள்ளது என்பதால் தவிர்க்க வேண்டும்.
6. சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் இவற்றை (சுத்தப்படுத்தியவை) சம அளவில் எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து குடிப்பது, உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.
7. சளிக்கான சிறப்பான வைத்தியம் இது.
ஒரு கைப்பிடி தூதுவளை,
ஒரு கைப்பிடி துளசி,
ஒரு வெற்றிலையுடன் ஒரு சிறிய துண்டு சுக்கு,
அரை டீஸ்பூன் மிளகு,
ஒரு டீஸ்பூன் முழு மல்லி சேர்க்கவும் (திப்பிலி இருந்தால் அரை டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்).
இவை அனைத்தையும் இரண்டு டம்ப்ளர் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். இதில், பெரியவர்கள் ஒரு டம்ளர், 15 வயது வரையுள்ள குழந்தைகள் அரை டம்ளர், 8 வயதுக்குக் கீழான குழந்தைகள் 10 மிலி என, 15 நாள்களுக்கு ஒருமுறை பருகி வரவும். நாள்பட்ட சளியையும் வெளியேற்றிவிடும். மேலும், நுரையீரலை பலப்படுத்தி சளி தங்காமல் காக்கும்.
8. ஒரு கைப்பிடி குப்பைமேனியை எடுத்து அலசி, அதோடு 4 மிளகு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்கவும். இதை மூன்று நாள்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரவும். இதைக் குடித்த பின்னர் நிச்சயம் வாந்தி வரும் பயப்பட வேண்டாம்... அது சளி வெளியேற்றமே. மேலும், குப்பைமேனியால் குப்பையான மேனியும் அழகுபெறும். பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும்.
9. நாம் அனைவரும் பரவலாக கபசுரக் குடிநீர் எடுத்துக் கொள்கிறோம். இதை எடுத்துக்கொள்வதிலும் ஒரு முறை இருக்கிறது. கபசுரக் குடிநீரை தொடர்ந்து மூன்று நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் 20 நாள்கள் இடைவெளிவிட்ட பின்னரே, மீண்டும் தொடர்ந்து 3 நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நினைவிருக்கட்டும், மருந்தும் விருந்தும் மூன்று நாள்களுக்குத்தான். எந்த மருந்தையும் 3 நாள்கள், மருத்துவர் பரிந்துரையின் பேரில் அதிகபட்சமாக 5 நாள்களுக்கு மேல் தொடர்ச்சியாக எடுக்கக்கூடாது.
குழந்தைகள் 10-15 மிலி அளவும், பெரியவர்கள் 30-50 மிலி அளவும் எடுத்துக்கொள்ளலாம். இந்த அளவை மீறி அதிகமாக எடுத்துக்கொள்ளும்போதும், பரிந்துரைக்கத்தக்கதைவிட குறைந்த இடைவெளியில் எடுத்துக்கொள்ளும்போதும் கல்லீரல் பாதிப்படையும் வாய்ப்பு ஏற்படலாம்.
10. இஞ்சி சேர்த்த ஜூஸ் வகைகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். இது அல்சர் பிரச்னையை ஏற்படுத்தலாம்.
11. இஞ்சியை எப்போதும் தோல் நீக்கிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
12. அதிமதுரத்தை கடையில் வாங்கி வந்த பின்னர், பாலில் அவித்து எடுத்து, உலர வைத்த பின்னரே பொடியாக்கிப் பயன்படுத்த வேண்டும்.
13. மஞ்சள் தூள் நல்லது. ஆனால், கடையில் ரெடிமேடாக விற்கும் பிரிசர்வேட்டிவ்கள் கலந்த மஞ்சள் தூளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கடையில் விரலி மஞ்சள் வாங்கி, அரைத்து, அந்தத் தூளைப் பயன்படுத்தவும்.
14. சரும நோய் உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றை தவிர்க்க வேண்டும்.
15. சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் முருங்கைக்கீரையைத் தவிர்க்க வேண்டும்.
16. எதை எடுத்துக்கொண்டாலும் அளவு என்பது மிக முக்கியமானது. உங்கள் வயது, உடல்நிலைக்கு ஏற்ற அளவு குறித்து, அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
17. அதேபோல, உணவும் மருந்தும் ஒருபுறம் இருக்க, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும் அவசியம். அதற்கு, மூச்சுப் பயிற்சி நல்ல பலனைக் கொடுக்கும்.
மேற்சொன்னவையெல்லாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், நோய் வராமல் தற்காக்கவுமே. உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெற்றே மருந்துப் பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில்கொள்ளவும்.