தமிழகத்தில் அமலில் உள்ள கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பஸ், ரெயில் போக்குவரத்தை மாநிலத்துக்குள் இயக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
அதன்படி பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. இன்று முதல் தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய போக்குவரத்து வசதியாக உள்ள மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே ஆலோசனை நடத்தி வருகிறது.
மின்சார ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்க ரெயில்வே வாரியத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். எனவே விரைவில் சென்னையில் புறநகர் மின்சார ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயில்வே வாரியம் ஒப்புதல் கிடைத்த பிறகு முதல் கட்டமாக குறைந்த அளவில் மின்சார ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ரெயில் போக்குவரத்து வசதியை தமிழகத்துக்குள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்குவது குறித்து ரெயில்வே வாரியத்துக்கு கோரிக்கை வைத்து உள்ளோம்.
ரெயில்வே வாரிய அனுமதி கிடைத்த பிறகு விரைவில் மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கும். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மின்சார ரெயில்களை இயக்குவதற்கு தயாராக இருக்கிறோம். ஏற்கனவே மின்சார ரெயில்களில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு உடனடியாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.