காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, சின்னக்கல்லார், கீழ் கோத்தகிரி எஸ்டேட் 5 செ.மீ., வால்பாறை, சோலையார் தலா 4 செ.மீ., மேல் பவானி, காட்பாடி, தோவாலா தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.