ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை விவகாரத்தால், இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒரு தன்னார்வலரின் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியதால், தடுப்பூசி பரிசோதனைகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை கண்டறிந்து இந்தியாவில் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு துறை (டிசிஜிஐ) தலைவர் டாக்டர் வி.ஜி.சோமணி வெளியிட்ட அறிவிப்பில், ‘சீரம் நிறுவனம் பரிசோதனைக்கு உட்படுத்திய ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம்’ என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ‘ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் தடுப்பூசியானது புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மருத்துவ பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, சீரம் நிறுவனம் பரிசோதனைக்கு உட்படுத்திய ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீரம் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாங்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்கிறோம். ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனங்கள் மீண்டும் பரிசோதனையை தொடங்கும் வரை இந்தியா சோதனைகளை நிறுத்தி வைக்கிறோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைவரின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். மேலும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது’ என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் சீரம் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘எங்களது சோதனைகளில் எந்தவொரு பிரச்னையும் ஏற்படவில்லை. சோதனைகள் தொடர்ந்து நடக்கிறது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Source: Tamil Murasu