கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு போன்றவற்றை உணவில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
யோகாசனம், பிராணயாமா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடிக்கடி போதுமான அளவு வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆயுஷ் மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். உடல்நலம் அனுமதித்தால், வழக்கமான வீட்டு வேலைகள் செய்யப்பட வேண்டும்.
சமச்சீர் சத்தான உணவு, புதிதாக சமைத்த எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை சாப்பிடுவது அவசியம். நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். போதுமான தூக்கம் அவசியம்.
கோவிட் 19 நிர்வகிக்கும் மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டபடி வழக்கமான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.