வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றுவிடிய விடிய மழை பெய்தது. இது அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருந்து வந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி நேற்று இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. குறிப்பாக நகரின் முக்கிய பகுதிகளான கிண்டி, ஈடுக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், அசோக் நகர், வடபழனி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.
இதேபோன்று பெரம்பூர், மாதவரம், திரு.விக நகர், கொளத்தூர், அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செ.மீ, கோவை மாவட்டம் சின்னகல்லாரில் 4 செ.மீ, நீலகிரி மாவட்டம் தேவலா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காட்டில் தலா 3 செ.மீ, பேச்சிப்பாறை, அரக்கோணம், பாபநாசம் திருவாரூர் ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். மேலும், வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ந்தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் அங்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அண்ணாநகர், மாதவரம், காசிமேடு, பெரம்பூர், வடபழனி, நுங்கம்பாக்கம் அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Sources Tamil Murasu