குளிர்காலம் மற்றும் பண்டிகைகளால் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதாக, நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஐசிஎம்ஆரும் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 61 லட்சத்தை கடந்தும், பலி 96 ஆயிரத்தை கடந்தும் உள்ளது. உலகளாவிய வல்லுநர்கள் அறிவுறுத்தலின்படி பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் கொரோனா தடுப்பு குழுவின் பிரதிநிதியான நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், தற்போதைய கொரோனா நிலைமை குறித்து கூறுகையில், ‘ வானிலை மாறிவருவதால் வைரஸ் பரவல் மிகவும் ஆபத்தானதாக மாறி வருகிறது.இதன் அறிகுறிகள் தற்போது தொடங்கிவிட்டன. குளிர்காலம் அதிகரிக்கும் போது, கொரோனா வைரசின் தீவிரம் அதிகமாக இருக்கும். அடுத்தடுத்த பண்டிகை காலங்கள் வருவதால், கொரோனா தொற்று பரவும் தீவிர அபாயம் உள்ளது.
காரணம், பண்டிகை காலங்களில் மக்கள் அதிக அளவில் வீட்டைவிட்டு வெளியே வருவார்கள். அப்போது, ஒருவருக்கொருவர் சந்திப்பார்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே, அடுத்த ஐந்து மாதங்களுக்கு சிறப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்’ என்றார்.இதற்கிடையே இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இரண்டாவது ‘செரோ’ (நோய் எதிர்ப்பு பொருளை கண்டறியும் சர்வே) கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ‘நாட்டின் ஒவ்வொரு 15 குடிமக்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள குடிசை பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்புகளின் பட்டியலின்படி 15.6 சதவீதம் நகர்ப்புற குடிசைகளில் இருந்து வந்தவை.அதே நேரத்தில், நகர்புற குடிசைக்கு வெளியே உள்ள பிற நகர்ப்புறங்களில் இருந்து 8.2 சதவீத பாதிப்புகள் உள்ளன. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ஓரளவு நிலைமை சீராக உள்ளது. கிராமப்புறங்களில் தொற்று விகிதம் 4.4 சதவீதமாக உள்ளது. ‘செரோ’ கணக்கெடுப்பின் அறிக்கையின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்று மக்கள் தொகை அதிகம் மற்றும் நெருக்கம் அதிகமான இடங்களில் அதிகமாக உள்ளது. இருப்பினும், 51 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source Dinakaran