உலக அளவில் ஆண்டு தோறும் செப்டம்பர் 10-ம் தேதி 'உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்' (World Suicide Prevention Day) ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட இரண்டு மடங்கு ஆண்கள் தான் தற்கொலை செய்கிறார்கள்.
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேரும், தமிழ்நாட்டில் சுமார் 10,000 பேரும், சென்னையில் 1300 பேரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். ஆண்டு தோறும் சுமார் 2 கோடி பேர் தற்கொலை முயற்சியிலிருந்து தப்புகிறார்கள்.
ஏன் தற்கொலை?
தற்கொலை என்பது ஒருவர் தன்னைத் தானே கொலை செய்து கொள்வதாகும். மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்...
பொதுவாக, தற்கொலை என்பது இயற்கைக்கு எதிரானச் செயலாக கருதப்படுகிறது. இந்தியாவில் உடன்கட்டை ஏறும் பழக்கத்தில் கணவனை இழந்த பெண்கள், கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது. பகுத்தறிவின் பலனாக அது காலப்போக்கில் மறைந்து விட்டது.
அதிக உடல் வேதனை, காயங்கள் - விபத்துக் காரணமாக இயங்க முடியாத நிலை போன்ற நிலைமைகளில் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்யும் வழக்கம் உள்ளது.
தான் மட்டுமே தோல்வியை சந்தித்து வருவதாகவும், தான் எதற்கும் லாயக்கு இல்லாதவன், குடும்பமே என்னை வெறுக்கிறது, எல்லா பிரச்னைகளுக்கும் நான் தான் காரணம் என்பது போன்ற எண்ணங்களே தற்கொலைக்கு முக்கிய மூலமாக இருக்கின்றன.
காரணங்கள்..!
காதல் தோல்வி மற்றும் திருமண முறிவு
மிகவும் சோர்வான நிலை
தீராத பிரச்னைகள் - நோய்கள்
(புற்றுநோய், பக்கவாதம்)
பாலியல் பலாத்காரம்
தேர்வில் தோல்வி
தாம்பத்திய உறவில் சந்தேகம்
குழந்தை இல்லாமை
போதை - மது பழக்கம் அடிமை
திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம்
கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்
கடன் - சொத்து பிரச்னை
வேலையின்மை அல்லது வேலை
இழப்பு
வியாபாரம்/தொழிலில் பிரச்னை
எப்போது நடக்கிறது?
பொதுவாக தனிமையில் இருக்கும் போது இரவு 12 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் அல்லது பகல் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) தான் தற்கொலைகள் நடக்கின்றன.
உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென் இந்தியாவில் தான் அதிகம்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
நாட்டின் மொத்த எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் சென்னையில் தற்கொலை செய்து கொள்வோர் மற்றும் முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை 11 சதவிகிதம் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது காவல் நிலையங்களில் பதிவான வழங்குகளின் அடிப்படையிலான விவரம். பதிவு செய்யப்படாதவை இவற்றை விட 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
மருத்துவத் தீர்வு..!
உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மூலம் தற்கொலை எண்ணங்களைத் தவிர்க்க முடியும். மனச்சிதைவு நோயால் ஒருவருக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை போக்க குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் முக்கியமாகத் தேவை.
சிநேகா தற்கொலை தடுப்பு மையம் (பெசன்ட் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14, 044 - 2835 2345) போன்றவை தற்கொலைக்கு முயன்றவர்களைத் தடுத்து அவர்கள் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடாதவாறு செய்து வருகிறார்கள்..
உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மீண்டு(ம்) வாழ்கிறோம் என்ற தலைப்பில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் பிழைத்தவர்கள் மனம் திறந்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் இந்தத் தினத்தில் நடக்கிறது.
தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்னை அல்ல. தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள், இரட்டை மன நிலையில் இருக்கிறார்கள். அதாவது, ஒரு புறம் வாழத் துடிக்கிறார்கள். அது முடியாத போது தான் தற்கொலைக்கு வருகிறார்கள். அது ஒரு சமூதாயத்தின் பிரச்னை என்பதை அனைவரும் புரிந்து செயல்பட்டால் நாட்டில் தற்கொலைகளை தடுக்க முடியும் என்பதே நிதர்சன உண்மை.
சமூக நோக்கத்துக்காக..!
பெரும்பாலான தற்கொலை தனக்காக நடக்கும் நிலையில் உலகில் அத்திப்பூத்தாற் சில தற்கொலைகள் சமூக நோக்கிற்காக நடக்கவும் செய்கிறது.
முத்துக்குமார், செங்கொடி முதல் துனீசியாவின் முகமது புவாஸிஸி (Mohamed Bouazizi) வரை பலரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி தன்னையை தீக்கு இரையாகினார், முத்துக்குமார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரைத் தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார், செங்கொடி.
துனிசீயாவைச் சேர்ந்த முகமது புவாஸிஸி என்ற 26 வயது இளைஞனின் தற்கொலை, அந்த நாட்டில் அரசியல் புரட்சிக்கு வித்திட்டது. முகமது வேலைக்காக ராணுவத்தில் சேர முயற்சி எடுத்தார். லஞ்ச ஊழல நிறைந்திருந்த அந்த நாட்டில் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. பல வேலைகளுக்கு முயற்சி செய்து முடியாமல் போகவே, தெருக்களில் காய்கறி விற்று பிழைப்பு நடத்தினர். அதற்கும் மாமூல் கேட்டு அதிகாரிகள் அராஜகம் செய்தனர். ஒரு கட்டத்தில் பெண் போலீஸ் ஒருவர் முகமதுவை அடித்து விட, மனம் வெறுத்த அவர், இது போன்ற பிரச்னை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று தனக்கு தானே நெருப்பு வைத்துக் கொண்டார்.
இந்தச் சம்பவம் கடந்த 2010, டிசம்பர் 17-ம் தேதி நடந்தது. உயிருக்கு போராடிய முகமது 2011, ஜனவரி 4-ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் துனீசியா நாட்டு மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. போராட்டத்தை தூண்டியது. விளைவு.. 23 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிபர் பென் அலி பதவி இழந்தார். இந்தப் புரட்சி, இதர அரபு நாடுகளுக்கும் பரவியது.
மக்கள் பிரச்னைகளில் நல்வழி காட்டும் நம்பத்தகுந்த அரசியல் தலைமைகள், சமூகப் போராளிகளின் முயற்சிகளுடன், பிறர் நலம் பேணும் மனோபாவத்துடன் மக்களும் நியாயத்துக்காக போராட முன் வருவது மட்டுமே சமூக நோக்கத்துக்காக தன்னுயிரை மாய்த்துக் கொள்வதைத் தடுப்பதற்கான வழி..!
பகிர்வு