இது கேரளாவுக்கு சோதனையான காலகட்டம். நிபா வைரஸ், பெருமழை, கொரோனா என்று அடுத்தடுத்து பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்த கடவுளின் தேசத்தை விமான விபத்தும் நிலச்சரிவும் பேரிடியாய் தாக்கியுள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. மோசமான வானிலை காரணம் என்றும், டேபிள்டாப் ரன்வே காரணம் என்றும், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
கேரளா விமானம்
ஆனால், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விமானத்தின் கறுப்புப் பெட்டியை ஆய்வு செய்து பார்த்தால்தான், விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது, அந்தக் கறுப்புப் பெட்டி ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் முன்னாள் விங் கமாண்டர் தீபக் வசந்த் சதேதான் விமானி. அகிலேஷ்குமார் துணை விமானியாக இருந்தார். அவர்கள் இருவரும் நல்ல அனுபவமுள்ளவர்கள், டேபிள்டாப் ரன்வேயும் அவர்களுக்கு நன்கு பழக்கப்பட்டதே என்று சொல்லப்படுகிறது. துபாயில் இருந்து மகிழ்ச்சியுடன் கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தின் அருகே வந்தபோது அந்த மகிழ்ச்சி மறைந்து, பயமும் பதற்றமும் தொற்றிக்கொண்டது.
விமானம் விபத்து
மோசமான வானிலை காரணமாக விமானத்தைத் தரையிறக்குவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன. கோழிக்கோடு விமானநிலைய ரன்வே, டேபிள்டாப் வடிவிலானது என்பதால் தொடர்ந்து சிக்கல் நீடித்துள்ளது. ரன்வேயின் தொடக்கப் புள்ளியை கண்டறிவதில் அவர்களுக்கு சிக்கல் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து விமானம் ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் கூறுகையில், ``இது மிகவும் துரதிர்ஷ்டவசமான விபத்து. இந்தக் காலகட்டத்தில் விபத்துக்கான காரணம் என்ன? என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், விபத்தைத் தவிர்க்க விமானிகள் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள். விமானத்தை முறையாகத் தரையிறக்க முடியாததால், மீண்டும் டேக் ஆஃப் செய்ய முயற்சி செய்துள்ளனர். அதுதான், பெரிய விபத்தில் இருந்து தப்பிக்க வைத்துள்ளது.
தங்களது உயிர் இருந்த கடைசி நிமிடம் வரை, அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது பற்றி யோசிக்காமல் விமானத்தை டேக் ஆஃப் செய்து நிலைமையை சமாளிக்க முயன்றுள்ளனர். அவர்கள் இருவரின் உயிரிழப்பு, எங்களுக்கு பேரிழப்பு" என்று கூறியுள்ளனர்.
இறந்த இரண்டு விமானிகளும் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதில், விமானி தீபக் வசந்த் சதே, தன் தாயின் பிறந்தநாளுக்கு சனிக்கிழமை சர்ப்ரைஸ் விசிட் கொடுக்க திட்டமிட்டிருந்தார். துணை விமானி அகிலேஷ்குமாருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்துள்ளது. அவர் மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் அவர் மனைவிக்கு பிரசவம் நடைபெற உள்ளது.
அகிலேஷ்குமார்
அதுகுறித்து அகிலேஷ் தன் நண்பர்களிடம் சந்தோஷமாகக் கூறிவந்துள்ளார். ஆனால், இந்த விபத்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. இவருவது இழப்பால், அவர்களது குடும்பத்தினர் மிகுந்த சோகத்துக்குள்ளாகியுள்ளனர்