ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது.
என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது.
பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார்.
என்னை எப்போதும் நாய் துரத்துகிறது.
என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது.
இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி.
புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.
சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான்.
தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி.
உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான்.
இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி.
எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான்.
உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது.
உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது.
நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.
உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள்.
நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.