அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவ பரிசோதனையில் உள்ள தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கம் ஆகிவிடும் என்பது சுகாதார நிபுணர்கள் கருத்தாக உள்ளது. போதிய தடுப்பூசிகள் இல்லாததால், தற்போது பரவலைக் கட்டுப்படுத்த சோதனை, சிகிச்சை, தொடர்புகளை கண்டறிதல் ஆகியவையே முக்கியம் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.
அதன்படி, இந்தியாவிலும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிக அளவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,61,715 மாதிரிகள் பரிசோதிக்கப்படுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,050 ஆகவும், பலி எண்ணிக்கை 803 ஆகவும் உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,55,745 ஆகவும், பலி எண்ணிக்கை 38,938 ஆகவும் அதிகரித்துள்ளது.
Source Tamil Murasu