பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கும் சட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. மருந்துகள் இல்லாத நிலையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
கொரோனா பாதிக்கப்பட்டவரிடம் பேசுவதன் மூலம், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல் மூலம் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்க சுகாதார துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி தமிழ்நாடு புகைபிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் சட்டத்தின் கீழ் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 2வது முறை ரூ.200 வரையும், 3வது முறை ரூ.500 வரையும் அபராதம் விதிக்க முடியும். இந்த சட்டத்தின்படி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக அபராதம் விதிக்க முடியும்.
மேலும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படியும் அபராதம் விதிக்கலாம். அதைப்போன்று உள்ளாட்சி அமைப்பு இது தொடர்பான துணை விதிகளை உருவாக்கியுள்ளன. இந்த துணை விதிகளை பின்பற்றியும் அபராதம் விதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இந்த சட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இனிமேல் கண்ட இடங்களில் எச்சில் துப்பினால் அபாரதம் கட்ட வேண்டியிருக்கும். இந்த சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்க சுகாதார துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.