கொழும்பு 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில், பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
அந்த கட்சிக்கு 145 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து 4-வது முறையாக மீண்டும் இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இலங்கையின் பிரதமராக இதற்கு முன் 3 முறை இருந்துள்ள ராஜபக்சே இப்போது 4-வது முறையாக பிரதமராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழா கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கேபினட் மந்திரிகள், மந்திரிகள், துணை மந்திரிகள் நாளை பொறுப்பேற்கின்றனர். புதிய நாடாளுமன்றம் வருகிற 20-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.எதிர்கால சவால்கள் என்ன? •
ராஜபக்சே சகோதரர்கள் பெருவெற்றி பெற்றுள்ளதால் அவர்களின் குடும்ப ஆதிக்கம் வலுப்பெறும். ராஜபக்சே தன் மகன் நாமல் ராஜபக்சேவை வருங்கால அதிபராக முன்னிறுத்தக்கூடும். இதனால் அவரது சகோதரர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. •
19-வது அரசியல் சட்டதிருத்தப்படி ஒருவர் 2 முறைக்கு மேல் இலங்கை அதிபராக இருக்கக்கூடாது என்ற சட்டத்தை தன் பெரும்பான்மை பலத்தை கொண்டு ராஜபக்சே மாற்ற முயற்சிப்பார் என சொல்லப்படுகிறது. அரசியல் சட்டத்தில் இது போல சில மாற்றங்களை செய்ய ராஜபக்சே முயல்வார். இதற்கு அதிபரான கோத்தபய எந்தளவுக்கு ஒத்து போவார் என்பது கேள்விக்குறியாகும்! •
அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு ஆட்சியை தர வேண்டும் என்ற நிர்பந்தம் அவருக்கு பலதரப்பிலும் இருப்பதால், அவர் ஒரு சார்பு நிலையை சுலபத்தில் எடுக்க முடியாது. •
ஏற்கனவே 2009 யுத்தம் தொடர்பான மனித உரிமை மீறல்கள், உயிர்பலிகள் தொடர்பாக சர்வதேச அளவில் மகிந்தராஜபக்சே பெயர் சரிந்துள்ளதால் அதை சரி செய்வதற்கு கிடைத்த வாய்ப்பாக இந்த ஆட்சியை அவர் பயன்படுத்த கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கூட்டணியில் இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக இடது முன்னணி, முற்போக்கு தமிழ் கட்சி, இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆகிய 10-க்கும் மேற்பட்ட பலதரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஜனநாயக அமைப்புகள் உள்ளதால் தமிழர்களை பாதிக்கும் அதிகார அத்துமீறல்களுக்கு இடம் இருக்காது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். • பொருளாதார ரீதியாக இலங்கையை மேம்படுத்த வேண்டும். பெரிய வல்லரசு நாடுகளின் நிர்பந்தத்திற்கு பணியாத, இறையாண்மை கொண்ட தனித்துவமிக்க நாடாக இலங்கையை பாதுகாக்க வேண்டும்.
நிரந்தர அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் சாத்தியப்படுத்த வேண்டும் ஆகியவையே தற்போதைய ஆட்சியாளர்கள் முன்புள்ள சவால்களாகும்!