‘100 நாட்கள் தொடர்ந்து 9 மணி நேரம் தூங்குவோருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும்’ என, பெங்களூருவை சேர்ந்த ‘வேக்பிட்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த மெத்தை தயாரிப்பு நிறுவனமான ‘வேக்பிட்’ கடந்தாண்டு முதன்முறையாக குறிப்பிட்ட நாட்கள், நீண்ட நேரம் தூங்குவோருக்கு ஒரு லட்சம் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. தூங்குவது தான் எளிதான ஒன்று என நினைத்தாலும், இதில் இன்டர்ன்ஷிப் பெறுவது எளிதல்ல. தூங்குவதே தங்களது முன்னுரிமை என்பதையும், எப்போதும் தூங்குவதையே விரும்புகிறோம் என்பதை பங்கேற்பாளர்கள் உண்மையிலேயே நிரூபிக்க வேண்டும்.கடந்தாண்டு இது வெற்றிகரமான முயற்சியாக இருந்தது. ஏனெனில் சுமார் 1.7 லட்சம் பேர் இந்த தூங்கும் போட்டியில் கலந்து கொண்டனர். ஆனால், அதில் 23 பேரால் மட்டுமே இதைச் செய்ய முடிந்தது.
இந்நிலையில் இந்தாண்டுக்கான போட்டியை வேக்பிட் நிறுவனம் அறிவித்துள்ளது. பங்கேற்க விரும்புவோர் வேக்பிட் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களை பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.தூக்கம் குறித்த மனநிலையை மாற்றுவதும், தூக்கத்தால் எவ்வாறு வளமாக மற்றும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை நிரூபிப்பதே தங்களது நோக்கமென வேக்பிட் கூறியுள்ளளது. ‘வெற்றிகரமாக இந்த போட்டியை முடிப்பவர்களுக்கு மட்டுமே பரிசு தொகை வழங்கப்படும்’ என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.