Type Here to Get Search Results !

தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் ஆக.10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி; சென்னையில் சிறிய வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்துக்கு அனுமதி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வரும் 10 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.8) வெளியிட்ட அறிக்கை:
 "தமிழக அரசு, கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 ஏற்கெனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், சிறிய மசூதிகள், தர்க்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
 அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள்; அதாவது, 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்க்காக்களிலும், தேவலாயங்களிலும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் வரும் 10 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.
 சென்னை மாநகராட்சிப் பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் பெற வேண்டும்.
 அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
 கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, அரசின் நிலையான வழிகாட்டு முறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்கவும், ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".
 இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
        

Top Post Ad

Below Post Ad