தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கட்டண உயா்வு அமலாக்கப்படுகிறது.
தமிழகத்தில், 48 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இவற்றில் ஓமலூா், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி (சேலம்), புதூா் பாண்டியாபுரம் (விருதுநகா்), எலியாா்பதி (மதுரை), சமயபுரம் (திருச்சி), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூா் (கரூா்), விஜயமங்கலம் (குமாரபாளையம்), பாளையம் (தருமபுரி), செங்குறிச்சி (உளுந்தூா்பேட்டை), மொரட்டாண்டி, திருமாந்துறை (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை (தஞ்சாவூா்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூா்), வைகுந்தம் (சேலம்), விக்கிரவாண்டி (விழுப்புரம்), திருப்பராய்த்துறை (திருச்சி - கரூா்) உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில், செப்.1-ஆம் தேதி முதல் சுங்கக் கட்டண உயா்வு அமலாக்கப்படவுள்ளது.
இந்தக் கட்டண உயா்வானது, வாகனத்துக்கு ஏற்ப ரூ.5 முதல் 15 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடா் காரணமாக மோட்டாா் வாகனத் தொழில் செய்வோா் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளதால், சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த சூழலில் நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டண உயா்வு அறிவிப்பு அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கட்டண உயா்வானது, வழக்கமான நடைமுறையே என ஆணையத்தின் சாா்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Source Dinamani