* இந்தியாவில் டிக்டாக் பயன்படுத்தியவர்கள் 20 கோடி பேர்.
*மாற்று செயலிகளுக்கு தற்போது மவுசு அதிகரிப்பு ரோபோசோ செயலியை 7.1 கோடி பதிவிறக்கம்
* சிங்காரி செயலியை 2.3 கோடி பதிவிறக்கம்
டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் இடத்தை பிடிக்கும் போட்டியில் ரோபோசோ, சிங்காரி, ஜிலி,டப்ஸ்மாஷ் செயலிகள் முன்னணியில் உள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை உருவானது. இதைதொடர்ந்து, சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு கடந்த ஜூன் 29ம் தேதி தடை செய்தது. இந்தியாவில் டிக்டாக் பயன்படுத்தி வந்தவர்கள் எண்ணிக்கை 20 கோடி பேர். இவர்களில் பலர் வெறும் பார்வையாளர்களாக இருந்தபோது, பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நடிப்பு, பேச்சு திறமையை வெளிப்படுத்தும் மேடையாக, காதல், அன்பு, பாசம், கோபத்தை வெளிப்படுத்தும் வடிகாலாக டிக்டாக் இருந்தது. டிக்டாக் பிரபலங்கள் என்ற பெயரில் பலர் நாட்டில் நடமாடி வந்தனர். டாஸ்மாக் கடையை கொரோனா ஊரடங்கின்போது திடீரென மூடியதால் குடிகார அன்பர்களுக்கு ஏற்பட்ட பதற்றத்தை விட அதிக நடுக்கம் டிக்டாக் தடையால் அந்த பிரபலங்களுக்கு ஏற்பட்டது. ஒரே இரவில் அந்த பிரபலங்கள் எல்லாருமே சாதாரணர்களாகிப் போனார்கள். அவர்களில் பலர் யூ டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அலை பாய்ந்தபடி உள்ளனர. இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதத்தில் டிக்டாக்கிற்கு மாற்றாக உள்ள செயலிகளின் பதிவிறக்கம் 155 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிங்காரி செயலியும் அவர்களது கவனத்தை ஈர்த்தது. 2.3 கோடிக்கும் அதிகமானோர் சிங்காரி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.இது தவிர டப்ஸ்மாஷ், ஜிலி, ரோபோசோ ஆகிய செயலிகளை இந்தியர்கள் அதிக அளவில் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில், ரோபோசோ 7.1 கோடி, ஜிலி 5.1 கோடி, டப்ஸ்மாஷ் 3 கோடியும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. ரோபோசோ முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு. ஜிலி சீனாவின் ஜியோமி நிறுவன தயாரிப்பு. டப்ஸ்மாஷ் அமெரிக்க நிறுவனத்தின் படைப்பு. அதே நேரத்தில் டிக்டாக் நிறுவனம் தனது சீன தொடர்புகளை துண்டித்து லண்டனில் தலைமை அலுவலகத்தை திறக்க ஏற்பாடு செய்கிறது. அப்படி செய்தாலும் இந்தியாவில் தடை நீக்கப்படுவது சந்தேகம்தான். அதே நேரத்தில் தற்போது, பதிவிறக்கத்தில் முன்னணியில் இருக்கம் செயலிகளில் எது டிக்டாக் அளவுக்கு பிரபலமடையும் என்பது தெரிய இன்னும் சில காலம் ஆகும் என்பது இன்டர்நெட் வல்லுநர்களின் கருத்து.