வாட்ஸ்அப் செயலியில் மார்டிநெலி எனும் வீடியோ அதிகளவில் பகிரப்படுவதாகவும், இந்த வீடியோவினை பார்த்தால் பயனரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு விடும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் வாட்ஸ்அப் கோல்டு வெர்ஷனிற்கு அப்டேட் செய்யக்கோரும் தகவலும் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் டேன்ஸ் ஆஃப் தி போப் என்ற மற்றொரு வீடியோவினை பார்க்க கூடாது. இதனை பார்த்தால் பயனர் மொபைல் போன் ஃபார்மேட் செய்யப்பட்டு விடும். இந்த தகவல்களை பிபிசி ரேடியோ வழங்கியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் அவற்றில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் கோல்டு இணைய ஊழல் ஆகும். இத்துடன் வைரல் பதிவுகளில் உள்ள இதர வீடியோக்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் வலம் வரும் கட்டுக்கதைகள் ஆகும். வைரல் தகவல்களில் உள்ள வீடியோ விவரங்களும் பல ஆண்டுகளாக இணையத்தில் பரவி வருகின்றன. முன்னதாக ஜூலை 29, 2017 -இல் ஸ்பெயின் தேசிய காவல் துறை இந்த தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்தது.
அந்த வகையில் வைரலாகும் வாட்ஸ்அப் மால்வேர் விவரங்கள் பொய் என உறுதியாகிவிட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Source Maalaimalar