*தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க உத்தரவு
*கொரோனா பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை முடக்க , மத்திய அரசு உத்தரவு
*டெல்லி , சத்தீஸ்கர் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்கள் முடக்கம்
*புதுச்சேரியில் மாஹே மாவட்டம் முடக்கம்
கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 370 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, இந்தியாவில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' பின்பற்றப்படுகிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதையடுத்து, நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து சேவை மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. நாடு முழுவதும் 75 மாவட்ட எல்லைகளில் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது.
இதையடுத்து, நாடு முழுவதும் எல்லைகளில் உள்ள 75 மாவட்டங்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் முடக்கப்படுகின்றன.
இதில் பெரும்பாலாக மாநிலங்களின் தலைநகரங்கள், முக்கிய நகர்ப்பகுதிகள் அடங்கிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கேரளத்தில் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, தெலங்கானாவில் ஹைதராபாத், புதுச்சேரியில் மாஹே, கர்நாடகத்தில் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களும் இடம்பெற்றுள்ளன.