வெலிங்டன், நியூசிலாந்து நாட்டில் கருக்கலைப்பு என்பது குற்றம். இதற்கு அங்கு 1977-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் வழிவகுத்து இருந்தது.இந்த நிலையில், அந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்தது.
இதற்கான மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 68 ஓட்டுகளும், எதிராக 51 ஓட்டுகளும் விழுந்தன. இதனால் மசோதா நிறைவேறியது.முதலில் இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த நியூசிலாந்து அரசு முடிவு செய்தது.
பின்னர் அந்த முடிவை கைவிட்டது.இப்போது கருக்கலைப்பு குற்றம் அல்ல என்று ஆக்கப்படுவதால், ஒரு சுகாதார பிரச்சினையாக மட்டுமே கருதப்படும் என நியூசிலாந்து நீதித்துறை மந்திரி ஆண்ட்ரூ லிட்டில் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்படுகிற ஒரே மருத்துவ முறை கருக்கலைப்பு என்று இருந்து வந்தது.
இப்போது அது குற்றம் என்ற நிலையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.இனி நியூசிலாந்தில் பெண்கள் 20 வாரங்கள்வரை கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள தடை ஏதும் இல்லை.