கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்த நோய் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவ காப்பீட்டு தொகையை கோரினால் அவர்கள் எடுத்திருக்கும் பாலிசிகளின் விதிகளுக்கு உட்பட்டு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதற்காக கண்காணிக்க மருத்துவமனையில் இருந்தால் கூட அதற்கான சிகிச்சைக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஏதாவது சில காரணங்களுக்காக நோயாளிகளுக்கு தொகை மறுக்கப்பட நேர்ந்தால், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் உரிய ஆய்வு செய்த பிறகே மறுக்க வேண்டும் எனவும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தவிர குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கப்படும் என வரையறுத்துள்ள நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான சிகிச்சைக்கும் காப்பீட்டு தொகை வழங்கும் வகையில் தங்களுடைய பாலிசி திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.