பட்டுக்கோட்டையில், ஜூஸ் கடை நடத்தும் இளைஞர், கொரோனா பரவாமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்த கூடிய வகையில், மருத்துவ குணம் நிறைந்த சூப் ஒன்றை தயார் செய்து, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சிவா, 28. இவர் நீதிமன்றம் எதிரே ஜூஸ் கடை வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை, வெகு விரைவாக தாக்குகிறது என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.இதையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் விதமாக பாரம்பரிய முறைப்படி, நெல்லிக்காய், கேரட், சின்ன வெங்காயம், கருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி, வேப்பிலை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து, சூப் தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சிவா கூறியதாவது: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் நம்மை சுற்றியுள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்க படக்கூடாது என முன்னெச்சரிக்கையாக, என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறையான உணவு பொருட்களை கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சூப் தயாரித்து, அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.சிவாவின் மொபைல் எண்: 90423 24217.