உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை, 4,637 பேர் உயிரிழந்துள்ளனர்; 1.26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே உலுக்கும் கொரோனா வைரசால் ஊடுருவ முடியாத நாடு ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. ஐ.நா., பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில், கென்யாவின் சுகாதாரத் துறை பிரதிநிதி ரூடி இக்கர்ஸ், 'கென்யாவில் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு இல்லை' எனத் தெரிவித்துள்ளார். 'வெப்பம் அதிகமாகவுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் உயிர்த்திருக்க முடியாது என்பதால், கென்யாவில் பரவவில்லை' என, உலக சுகாதார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.நுரையீரல் என்ன ஆகும்?சீனாவில் கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹான் வன விலங்கு விற்பனைச் சந்தையில் வேலை செய்த, 44 வயது நபருக்கு, கடந்த ஆண்டு டிச., 25ம் தேதி, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தீவிர சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சைப் பலனின்றி சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். அவருக்குச் சிகிச்சையளித்த போது, அவரது நுரையீரலில் ஏற்பட்ட மாற்றங்களை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அந்த எக்ஸ்ரே படங்களை, வட அமெரிக்காவின் ரேடியோலஜிக்கல் சொசைட்டி தற்போது வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாதிக்கப்பட்டவரின் நுரையீரலில் திரவத்தின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருவதை, அந்த படங்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. 'கொரோனா வைரஸ் எப்படி ஒரு மனிதனின் நுரையீரலை கடுமையாகப் பாதிக்கிறது என்பதை அந்த படங்களில் காணமுடிகிறது. 'நுரையீரலிலுள்ள காற்றுப்பைகள் பாதியளவு திரவத்தால் நிரம்புதல்' (ground glass opacity) என்ற அசாதாரண மாற்றம் இது' என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Source Dinamalar