உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இந்தியாவில் 84 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வைரஸ் பாதிப்பு சூழலை தேசியப் பேரிடர் என்று மத்திய அரசு சனிக்கிழமை பிரகடனம் செய்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தைக் கவனத்தில் கொண்டு, அதன் பாதிப்பை சுகாதார அவசர நிலை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதேபோல், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, அதை தேசியப் பேரிடராக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டும். நோயாளிகளுக்கான தற்காலிக தங்குமிடங்கள், உணவு, உடைகள், மருத்துவ சாதனங்கள், தனி முகாம்கள் ஆகியவற்றை மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இந்த ஏற்பாடுகளை, மாநில பேரிடர் நிவாரண நிதியைப் பயன்படுத்தி, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும். இந்தச் செலவுத்தொகை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது. இதேபோல், ஒரு மாநிலத்தில் எத்தனை முகாம்களை அமைக்க வேண்டும்,
அந்த முகாம்களில் ஒருவரை எத்தனை நாள்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் ஆகியவற்றை சூழலைப் பொருத்து மாநில நிர்வாகக் குழுக்களே முடிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கான செலவுகள், ஒரு மாநிலத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஓராண்டுக்கு ஒதுக்கப்படும் தொகையில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது. கூடுதலாக மருத்துவ ஆய்வகங்கள் அமைப்பது, தனிநபர் சுகாதார கவச சாதனங்கள் வாங்குவது, கரோனா கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மாநகராட்சி, காவல் துறை, தீயணைப்புத் துறைக்கான செலவு ஆகியவற்றை மாநில பேரிடர் நிதியில் இருந்து செலவு செய்யலாம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா அனுமதி சந்திப்புகளை ரத்து செய்த அமெரிக்க தூதரகம்:
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும், பிற நகரங்களில் உள்ள துணைத் தூதரகங்களிலும் வரும் 16-ஆம் தேதி முதல் விசா அனுமதி அளிப்பது தொடர்பான அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தடை கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடாளுமன்ற வளாகத்தை பொதுமக்கள் சுற்றிப் பார்ப்பதற்கும், மக்களவையில் பார்வையாளர் மாடங்களில் பொதுமக்களை அனுமதிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இது அமலில் இருக்கும்.