அசைவ உணவுகளால் கரோனா வைரஸ் பரவும் என்ற தவறான வதந்திகளை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டாம் என்று மத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளைப் போன்று இந்தியாவிலும் தடுப்பு நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கரோனா வைரஸ் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கரோனா வைரஸ் பரவுவதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று உலக விலங்குகள் சுகாதார அமைப்பு (OIE) மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை(FSSAI) கூறியுள்ளது.
எனவே, அசைவ உணவுகளால் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது என்ற தவறான வதந்திகளை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டாம். இத்தகைய வதந்திகளினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகளுக்கு மக்கள் பலியாக வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினார்.