டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் புனேயை சேர்ந்த ஆணுக்கு, உலகின் சிறந்த தாய் என்ற விருது கிடைக்க உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் ஆதித்ய திவாரி. மென்பொருள் பொறியாளரான இவர், கடந்த 2016 ல் டவுன் சிண்ட்ரோம் நோய் பாதித்த குழந்தையை தத்தெடுத்தார். குழந்தையை வளர்ப்பதற்காக தனது வேலையை ராஜினாமாவும் செய்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். 22 மாநிலங்களில் டவுன் சிண்ட்ரோம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாய் ஸ்தானத்தில் அவர் செய்யும் சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நடந்த வெம்பவர் நிகழ்ச்சியில், ஆதித்ய திவாரிக்கு உலகின் சிறந்த தாய் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருது தொடர்பாக ஆதித்ய திவாரி கூறுகையில், உலகின் சிறந்த தாய் விருது பெற்றது மகிழ்ச்சி. சிறந்த மனிதனாகவும், குழந்தைக்கு சிறந்த பெற்றோராகவும் இருக்க விரும்புகிறேன். அவ்வாறு, எப்படி இருக்க வேண்டும் என, எனது மகன் கற்று கொடுத்துள்ளான். 1.5 வருட சட்டப்போராட்டத்திற்கு பிறகு தான் குழந்தை எனது வசம் வந்தது. அப்போது முதல் எங்களது பயணம் இனிமையானதாக உள்ளது. எனக்கு கடவுள் கொடுத்த சிறந்த பரிசு. பெற்றோர் தன்மை என்பது பாலினம் பொறுத்தது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்