கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்புவர்கள் கைது செய்யப்படுவார்கள் என மதுரை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
சீனாவில் தொடங்கி 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3053 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 74 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் நேற்று ஒரு நாளில் 42 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரமாக குறைந்திருந்த உயிரிழப்புகள் தற்போது மீண்டும் அதிகரித்து வருவது உலக நாடுகளை பீதியடையச் செய்துள்ளது.
இந்நிலையில் மேலூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கோழி இறைச்சி மூலமாகவே இது பரவுவதாகவும், வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பப்பட்டது.
இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கோழி இறைச்சி வாங்குவதை தவிர்த்ததால், அதன் விலை கடுமையாக குறைந்தது. இது குறித்து, போலீசார் தரப்பில், கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பினால் கைது நடவடிக்கை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் குறித்து, சமூக வலைதளங்களில் திரைப்பட காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது போன்ற போலி தகவல்களால், பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.