தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்திய அளவில் கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே மூன்றுமுறை கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடப்பட்டது.
போன முறை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை செயல்படாது என தெரிவித்திருந்தார் எடப்பாடி.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாரசந்தைகளையும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய ஜவுளி கடைகள், நகைக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிளும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஏற்பாடு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
பல்பொருள் அங்காடி, மளிகை கடை, காய்கறி கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.