கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வருவோர் அல்லது கரோனா பாதித்தவர்களுடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
தனிமைப்படுத்தப்படுவர்கள், மருத்துவக் கண்காணிப்பையும் மீறி வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையில், அவர்களது கையில் முத்திரைக் குத்தும் நடவடிக்கையில் மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது.
பொதுமக்களுடன் கலந்து விடாமல், அடையாளம் காண எளிதாக, மகாராஷ்டிரத்தில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் இடது கையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்ற அடையாளத்துடன், அவர் எத்தனை நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற தேதியும் முத்திரையாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் தற்போது 39 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பாதிப்பு உள்ள மாநிலமாகவும் மகாராஷ்டிரம் உள்ளது. இந்த நிலையில் கண்காணிப்பில் இருந்த 7 பேர் கடந்த இரண்டு நாட்களில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, மருத்துவமனைகள் மற்றம் விமான நிலையங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களின் கையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்றும், எத்தனை நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டியவர்கள் என்ற தேதியையும் அழியாத இங்கில் முத்திரையாகக் குத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், பொதுவிடங்களில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் பொதுமக்களே அடையாளம் காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனிமையில் இருக்க வேண்டியவர்கள், பொதுவிடங்களுக்கு வருவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.