இனி ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற நிறக் குருடு என்பது ஒரு தடையாக இருக்காது, சிறிய நிறக் குருடு இருப்பவர்கள் வணிக ரீதியிலான வாகனங்களை இயக்கவும் விரைவில் ஓட்டுநர் உரிமம் பெறலாம்.
இந்த விவகாரம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த கண் சிறப்பு நிபுணர்கள் கொடுத்த பரிந்துரையை பரிசீலித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விரைவில் நல்ல முடிவை அறிவிக்க உள்ளது.
நிறக் குருடு இருப்பவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசுக்கு வந்த கோரிக்கைகளை ஏற்று, இது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களை மத்திய அரசு கோரியிருந்தது.
உலக மக்கள் தொகையில் 3% பேருக்கு இந்த குறைபாடு இருக்கிறது. சாதாரண வெளிச்சத்தில் ஒரு பொருளின் நிறத்தை சரியாகக் காண முடியாதது அல்லது நிறத்தை உணர முடியாதது நிறக் குருடு எனப்படுகிறது.
இதுபோன்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது தொடர்பாக ஆராய்ந்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர், இந்த பிரச்னை இருப்பவர்களுக்கு ஐரோப்பிய யூனியனில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதையும், அமெரிக்காவில் வணிக ரீதியான வாகனங்களை இயக்க உரிமம் வழங்கப்படாததையும் கண்டறிந்துள்ளது.
அதாவது, நிறக் குருடு பிரச்னை இருப்பவர்கள், சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சமிக்ஜை விளக்குகளின் நிறத்தை பெரும்பாலும் கண்டறிய முடிகிறது என்றும், அவ்வாறு நிறத்தைக் கண்டறிய முடியாவிட்டாலும், அந்த விளக்கு இருக்கும் இடம், அதன் அமைப்பு, அதில் இருக்கும் சில அம்புக் குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டு ஓட்டுநர்கள் எளிதாகவே சமிக்ஞை விளக்கின் நிறத்தை அறிந்து கொள்ள முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேப்போல சாலை சமிக்ஞைகளில் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் நல்லதொரு துவக்கமாகும். இதனால் நிச்சயம் சாலைப் பாதுகாப்புக்கு ஊறு ஏற்படாது. சாதாரண ஓட்டுநர் உரிமத்துக்கான தேர்வுகளில் ஒருவர் தேர்ச்சி பெற்று விட்டாலே, அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல், இந்த முறையால், நிறக் குருடு இருப்பவர்கள் லஞ்சம் கொடுத்து ஓட்டுநர் உரிமம் வாங்குவதும் தவிர்க்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறையினர் கூறுகிறார்கள்.
இவ்வாறு நிறக் குருடு இருப்பவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் முடிவை மத்திய அரசு முன்னெடுக்கும் முகமாக, மாநில அரசுகள் ஒரே மாதிரியான சாலைச் சந்திப்புகளில் இருக்கும் சமிக்ஜைகளை அமைக்க வேண்டும், அதன் குறியீடுகளை ஒன்றுபோல பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்த உள்ளது.