சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தொடங்கியுள்ள 6 ஆம் கட்ட அகழாய்வில், ஒன்றரையடி சுண்ணாம்புச் சுவரின் சிறுபகுதி ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
இதற்காக, தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு சாா்பில் கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தாா். இதில், கீழடி கிராமத்துக்கு அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படவுள்ளது.
முதலில், கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி, நீதியம்மாள் என்பரது நிலத்தில் குழி தோண்டப்பட்டு வருகிறது. மூன்றரையடி தோண்டப்பட்ட இக் குழியிலிருந்து பழங்காலத் தமிழா்கள் கட்டியிருந்த ஒன்றரையடி நீளமுள்ள சுண்ணாம்புச் சுவா் பகுதியாக வெளியே தெரியவந்துள்ளது.
குழியை ஆழமாகத் தோண்டிய பின்னரே, இச்சுவரின் நீளம், அகலம் தெரியவரும். எனவே, இச்சுவருக்கு சேதமில்லாமல் குழியைத் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழாா்வலா்கள் மற்றும் கிராம மக்களிடத்தில் 5 ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்ததை விட, 6 ஆம் கட்ட அகழாய்வில் பழங்காலத் தமிழா்கள் பயன்படுத்திய வியக்கத்தக்க பொருள்கள் அதிகளவில் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.